Images
  • koala (1)
    (படம்: Pixabay)

உலகில் முதன்முறையாக செயற்கைப் பாதம் பொருத்தப்பட்ட கோலா

உலகில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோலா ஒன்றுக்குச் செயற்கைப் பாதம் பொருத்தப்பட்டுள்ளது.

Triumph எனும் பெயர் கொண்ட அந்த ஆண் கோலாவுக்கு, பிறவியிலேயே வலப்புறக் காலில் பாதம் கிடையாது.

பல் மருத்துவர் ஒருவரது முயற்சியால், செயற்கைப் பாதத்தைப் பெற்றது கோலா.

சில ஆண்டுகளுக்கு முன்,ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், உயிருக்குப் போராடும் தாய்க்கு அருகே காணப்பட்டது அந்தக் கோலா.

கண்டதும் மனம் உருகிப்போனார் விலங்குநலத் தாதி மார்லி கிறிஸ்டியன் (Marley Christian)

கோலா பராமரிப்பு நிலையத்திற்கு எடுத்துவந்து Triumph என்று அதற்கு பெயர் சூட்டி வளர்க்கலானார் அவர்.

கோலாவுக்கு இளம் வயது என்றாலும், பாதம் இல்லை என்பதால், அதனால் ஓடி, ஆடி ஆனந்தமாக இருக்கமுடியவில்லை.

அதற்கு செயற்கைப் பாதம் பொருத்த, அமெரிக்க நிறுவனம் ஒன்றை நாடினார் கிறிஸ்டியன்.

இருப்பினும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இதைக் கேள்விப்பட்டுக் கோலாவுக்குக் கைகொடுக்க முன்வந்தார் உள்ளூர்ப் பல் மருத்துவர்.

அவருக்கு பொய்ப் பற்களை வடிவமைத்த அனுபவம் அதிகம் இருந்ததால், பல் மருத்துவரின் கைவண்ணத்தில் கோலாவின் குட்டிப் பாதம் தயாரானது.

செயற்கைப் பாதம் என்று சொல்லமுடியாத அளவுக்குப் பொருந்திப் போனது அது.

இப்போது, துள்ளிக் குதித்துச் சுற்றித்திரிந்து, பார்ப்போர் மனத்தில் ஆனந்தை அள்ளி இறைக்கிறது அந்த கோலா.



 

Top