Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குட்டிகளை ஈன்ற 3 நாள்களில் அவற்றைக் கொன்று தின்ற தாய்ச் சிங்கம்

ஜெர்மனியிலுள்ள ஒரு விலங்குத் தோட்டத்தில், தான் ஈன்ற இரண்டு குட்டிகளைத் தாய்ச் சிங்கம் கொன்று தின்றது. 

வாசிப்புநேரம் -

ஜெர்மனியிலுள்ள ஒரு விலங்குத் தோட்டத்தில், தான் ஈன்ற இரண்டு குட்டிகளைத் தாய்ச் சிங்கம் கொன்று தின்றது.

கிகலி என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பெண் சிங்கம், முதன்முறையாகக் குட்டிகளை ஈன்றது. அந்த விலங்குத் தோட்டத்தில், கடந்த 15 ஆண்டுகளில், சிங்கக் குட்டிகள் பிறந்தது இதுவே முதன்முறை.

அந்தக் குட்டிகள் இவ்வாறு மாண்டது, விலங்குத் தோட்ட ஊழியர்களிடையே கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, கிகலி குட்டிகளை ஈன்றது. தொடக்கத்தில் அது குட்டிகளை நன்றாகவே பராமரித்துப் பாலூட்டியது. ஆனால், திடீரென திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) மாலையில் குட்டிகளைக் கொன்று தின்றுவிட்டது.

விலங்குத் தோட்டப் பேச்சாளர் அதனைத் தெரிவித்தார்.

பொதுவாகக் காட்டில் வாழும் விலங்குகள் சில இவ்வாறு முதல்முறையாகக் குட்டிகளை ஈனும்போது அவற்றைக் கொன்று தின்பதுண்டு. அதேபோல், விலங்குத் தோட்டத்திலும் நடப்பது இயல்பானதே எனப் பேச்சாளர் கூறினார்.

இருப்பினும், காட்டுச் சூழலைக் காட்டிலும் கூண்டுக்குள் அடைத்து வைத்து வளர்க்கப்படும் பெண் விலங்குகளிடையே இந்தப் பழக்கம் அதிகம் என்றும் அவர் சொன்னார்.

குட்டிகள் உடல்நலம் குன்றியிருந்து, அவை உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், தாய் அவற்றைக் கொன்று தின்றுவிடுமென்று விலங்குகளின் நடத்தையை ஆராயும் வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள்கூட இவ்வாறு செய்வதுண்டு என்றனர் வல்லுநர்கள்.

புதிதாகப் பிறந்த குட்டிகள் என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றைச் செய்யத் தவறினால், விலங்குகளின் தாய்மை உணர்வு தூண்டப்படாது என்பதை அவர்கள் சுட்டினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்