Images
  • nyc

நடைபாதையில் வாகனத்தை வேண்டுமென்றே ஓட்டியதாக நம்பப்படும் ஆடவர் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்

அமெரிக்காவில், வாகனத்தை நடைபாதையில் செலுத்திச் சிலர் மீது மோதப்பார்த்த ஆடவர் ஒருவர், வழிப்போக்கர்கள் தாக்கியதில் மாண்டதாக நம்பப்படுகிறது.

ஹாதார்ன் (Hawthorne) பகுதியில் சம்பவம் நடந்ததாக லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறைப் பிரிவினர் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்றதற்கு முன், கடை ஒன்றில் அந்த ஆடவர் இன்னொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அந்த ஆடவர் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அப்போதைக்கு அங்கிருந்து வெளியேறினாலும், பின்னர் அங்கே வந்த அவர், தம்முடைய வாகனத்தை நடைபாதையில் செலுத்தத் தொடங்கினார்.

சிலர் மீது மோதப் பார்த்த அவரை, மற்றவர்கள் வண்டியிலிருந்து வெளியே இழுத்து அடிக்க முயன்றனர்.

அவர் அதிலிருந்து தப்ப முடிந்தது. இருப்பினும், வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற அவர், கட்டடம் ஒன்றின்மீது மோதினார்.

பின்னர், அங்கு இருந்தவர்கள் அவரை வாகனத்திலிருந்து வெளியே இழுத்துப்போட்டு அடிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

பலத்த காயத்துடன் தரையில் கிடக்கக் காணப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள், அங்கேயே அவர் மாண்டதாக அறிவித்தனர்.  

Top