Images
  • Mike Pence
    அமெரிக்கத்  துணையதிபர் மைக் பென்ஸ்.(படம் : ராய்ட்டர்ஸ்)

அரசமைப்புச் சட்டத்தின் 25 ஆவது திருத்தத்தின்படி அதிபர் டிரம்ப்பைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையைத் துணையதிபர் மைக் பென்ஸ் நிராகரித்தார்

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 25 ஆவது திருத்தத்தின்படி, அதிபர் டோனல்ட் டிரம்ப்பைப் பதவியிலிருந்து அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கப் போவதில்லை என்று துணையதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். 

ஒருவரைத் தண்டிப்பதற்காக அந்தச் சட்ட நடைமுறையைப் பயன்படுத்தக்கூடாது என்று
மக்களவை நாயகர் நான்சி பெலோசிக்கு (Nancy Pelosi) எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டார்.

உடல்நலம் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டுப் பணியாற்ற முடியாமல் போகும்போதுதான் அந்தச் சட்டத்தைக் கையில் எடுக்கவேண்டும் என்று திரு மைக் பென்ஸ் கூறினார்.

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் சென்ற வாரம் நடந்த வன்முறைக்குத், தமது உரையே காரணம் என்ற கூற்று "முற்றிலும் பொருத்தமற்றது" என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

நாடாளுமன்ற வன்முறை தொடர்பில், திரு. டிரம்ப்பை அதிபர் பொறுப்பிலிருந்து அகற்ற ஜனநாயகக் கட்சியினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

25 ஆவது சட்டத்திருத்தத்தின்படி, அதிபர் தம்முடைய பொறுப்புகளைச் சரியாகச் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தி, தவணை முடியும் வரை துணையதிபர் மைக் பென்ஸை அந்தப் பொறுப்பில் நீடிக்கச் செய்யமுடியும். 

Top