Images
  • plane stealer
    (படம்:  AFP)

விமானத்தைத் திருடிய ஊழியர் பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபடவில்லை - அமெரிக்க அதிகாரிகள்

அமெரிக்காவின் சியேட்டல்-டக்கோமா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து விமானத்தைத் திருடுவதற்குமுன் அந்த ஊழியர் யாருக்கும் சந்தேகம் ஏற்படாதபடி நடந்துகொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவர் பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபடவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் விமானத்தைத் திருடியதற்கான காரணத்தைக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

விமானத்தைத் திருடிய ஊழியர் 29 வயது ரிச்சர்ட் ரஸல் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் ஹரிஸோன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

விமானத்தைச் செலுத்தத் தொடங்கிய தொண்ணூறு நிமிடத்தில் சிறிய அமெரிக்கத் தீவான பியூஜிட் சவுண்ட் பகுதியில் அது விழுந்து நொறுங்கியது.

திருடப்பட்ட பயணிகள் விமானத்தைப் பின்தொடர்வதற்கு இராணுவம் இரண்டு போர்விமானங்களை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர் ஆளில்லா விமானத்தைத் திருடிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் சந்தேக நபர் மட்டுமே இருந்திருக்கிறார்.

விமானத்தை அருகிலுள்ள இரணுவத் தளத்தில் தரையிறக்குமாறு விமானப் போக்குவரத்து அதிகாரி கூறியதை அவர் கேட்க மறுத்துள்ளார்.

விமானம் விழுந்து நொறுங்கி இறப்பதற்கு முன்னால் விமானத்தைச் செலுத்திய ஊழியர் பேசிய கடைசி வார்த்தைகள் இவை:

நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. என் காதில் நல்ல விஷயங்களை மட்டும் பேசுங்கள். என்னைப் பற்றிக் கவலைப்பட நிறையப் பேர் இருக்கிறார்கள். இதைச் செய்தற்காக நான் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

ஊழியரின் செயல் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Top