Images
  • solider
    படம்: AFP/Joel Angel JUAREZ

டெக்சஸ் துப்பாக்கிச்சூடு: குழந்தைகளைக் காப்பாற்றிய இருவரைப் போற்றும் பொதுமக்கள்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

டெக்சஸ் மாநிலத்தின் எல் பாசோ (El Paso) நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது, பிள்ளைகளைத் தூக்கிச் சென்று காப்பாற்றிய இருவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுவருகிறது.

சம்பவத்தில் 20 பேர் மாண்டனர். 26 பேர் காயமடைந்தனர். 20 வயதுத் துப்பாக்கிக்காரன் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டான்.

ராணுவ அதிகாரியான க்ளெண்டன் ஓக்லி (Glendon Oakley)  சம்பவம் நடந்தபோது பணியில் இல்லை.

Walmart பேரங்காடிக்கு அருகில் இருந்த கடை ஒன்றில் சட்டை வாங்கிக்கொண்டிருந்த அவரிடம் ஓடி வந்த பிள்ளை, ஆடவர் ஒருவர் பேரங்காடியில் துப்பாக்கியால் அனைவரையும் சுட்டுக்கொண்டிருப்பதாகச் சொன்னது.

கடையை விட்டு வெளியில் வந்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனதாகச் சொன்னார் க்ளெண்டன்.

எங்கு திரும்பினாலும் துப்பாக்கியால் சுடும் சத்தம்....

பிள்ளையைக் கூட்டிக்கொண்டு கார் நிறுத்துமிடத்துக்குச் சென்றபோது, பெற்றோர் இன்றிப் பல பிள்ளைகள் அங்கும் இங்கும் அழுதுகொண்டு ஓடுவதைப் பார்த்தார் அவர்.

உடனே அருகில் இருந்த மற்றோர் ஆடவரை அழைத்துக்கொண்டு எத்தனை முடியுமோ அத்தனை பிள்ளைகளை அள்ளிக்கொண்டு இருவரும் தலைதெறிக்க ஓடினர்.

களேபரம் முடியும் வரை அவர்களைப் பத்திரமான இடத்தில் வைத்துக்கொண்டனர்.

அந்தத் தருணத்தில் தம்மைக் காட்டிலும், பிள்ளைகளைப் பற்றிய சிந்தனையே அதிகமாக இருந்ததாய் அவர் தெரிவித்தார்.

க்ளெண்டனுக்கும், அவருடன் உதவிய மற்றோர் ஆடவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன.

எனக்கு ஒரு பிள்ளை இருந்திருந்து, அது இப்படிச் சிக்கித் தவித்திருந்தால், ஒருவர் என்ன செய்திருக்கவேண்டும் என்று நினைப்பேனோ, அதையே நான் செய்தேன்.

என்று பெருமிதம் பொங்கக் கூறினார் க்ளெண்டன்.


Top