Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விமானத்துக்குள் எடுத்துச் செல்லும் கைப் பைக்கு ஏன் காசு ? நிராகரித்தது நீதிமன்றம்

மலிவுக் கட்டண விமான நிறுவனமான ரயான்ஏர் (Ryanair), பயணிகள் விமானத்தினுள் கையில் எடுத்துச் செல்லும் பைக்குக் கட்டணம் விதிப்பது மிதமிஞ்சிய செயல் என ஸ்பானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

வாசிப்புநேரம் -

மலிவுக் கட்டண விமான நிறுவனமான ரயான்ஏர் (Ryanair), பயணிகள் விமானத்தினுள் கையில் எடுத்துச் செல்லும் பைக்குக் கட்டணம் விதிப்பது மிதமிஞ்சிய செயல் என ஸ்பானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறப்பு அனுமதிச் சீட்டு பெறாமல், பயணி ஒருவர் கையில் பையை எடுத்துச் சென்றதற்காக, ரயான்ஏர் அண்மையில் அவருக்கு அபராதம் விதித்தது.

10 கிலோகிராம் எடையுள்ள அந்தப் பையைக் கொண்டு சென்றதற்காக அவருக்கு 20 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.

ரயான்ஏர், சிறிய பைகளை விமானத்தினுள் எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது. ஆனால், முன்னாலுள்ள இருக்கைக்கு அடியில் வைத்துக்கொள்ளக் கூடிய அளவுள்ள பைகளுக்கு மட்டுமே இலவச அனுமதி.

அந்த அளவைத் தாண்டிய பைகளை உள்ளே கொண்டுவந்தால், அதற்கெனத் தனியே கட்டணம் செலுத்தவேண்டும்.

மாட்ரிட்டிலிருந்து பிரஸ்ஸல்ஸுக்குச் சென்ற பெண் பயணி செலுத்திய அபாரதத் தொகையை வட்டியோடு திருப்பிச் செலுத்த, நீதிபதி, ரயான்ஏர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

அந்தப் பெண் கொண்டுவந்த பையை, விமான மேற்புறப் பெட்டிக்குள் எளிதாக வைக்கமுடியுமென்பதை அவர் சுட்டினார்.

ரயான்ஏர் நிறுவனத்தின் மிதமிஞ்சிய அந்தக் கொள்கை செல்லுபடியாகாது என்று அறிவித்த நீதிமன்றம், விமான நிறுவன நிபந்தனைகளில் இருந்து அதை நீக்கும்படி உத்தரவிட்டது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமுடியாது.

இருப்பினும் அண்மைத் தீர்ப்பு, தனது கொள்கையை மாற்றாது என ரயான்ஏர் குறிப்பிட்டது.

விமானத்தினுள் எடுத்து வரப்படும் பைகளின் அளவைத் தீர்மானிக்கும் வர்த்தகச் சுதந்திரத்தை நீதிமன்றம் தவறாய்ப் புரிந்துகொண்டிருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டது.

நடந்தது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும் அது தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்