Images
  • US senate
    படம்: REUTERS/Erin Scott

சீன நிறுவனங்கள் சிலவற்றைப் பங்குச் சந்தையிலிருந்து அகற்ற அனுமதிக்கும் மசோதாவை அங்கீகரித்தது அமெரிக்க செனட்

அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் இருந்து, சீன நிறுவனங்கள் சிலவற்றைத் தடைசெய்ய அனுமதிக்கும் சட்ட மசோதாவை, அமெரிக்க செனட் சபை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

குடியரசு, ஜனநாயகக் கட்சி இரண்டுமே அந்த மசோதாவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டன.

அது நடப்புக்கு வந்தால், அந்தச் சீன நிறுவனங்கள் தங்களது பங்குகளை அமெரிக்கப் பங்குச் சந்தையில் விற்பனைக்கு விடமுடியாது.

புதிய சட்ட மசோதா, அடுத்து அமெரிக்க மக்களையின் அங்கீகாரத்துக்கு அனுப்பப்படும்.

அங்கும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதிபர் டிரம்ப் அதில் கையெழுத்திட்டுச் சட்டமாக்குவார்.

புதிய மசோதாவின்படி, பங்குகளை விற்பனைக்கு விடும் நிறுவனங்கள், வெளிநாட்டு அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றனவா என்பதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்.

வெளிநாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமாக இருந்தாலும் அதைத் தெரிவிக்கவேண்டும்.

புதிய மசோதா, வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்துக்குமே பொருந்தும். இருப்பினும், அது சீனாவை இலக்காகக்கொண்டே வரையப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு, நாளுக்குநாள் சீர்கெட்டு வரும்நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலடியாக, சீனாவும் இதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாமெனப் பொருளியல் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  

Top