Images
  • SOKO actress dies
    (படம்: AFP)

தென்கொரியாவிலிருந்து கடத்தப்பட்ட நடிகை 91 வயதில் காலமானார்

வடகொரியாவின் காலஞ்சென்ற தலைவர் கிம் ஜோங் இல்லின் உத்தரவுப்படி தென்கொரியாவிலிருந்து கடத்தப்பட்ட நடிகை Choi Eun-hee காலமானார்.

அவருக்கு வயது 91.

1970களில் தென் கொரியாவின் பிரபல நடிகையாகத் திகழ்ந்தார் திருவாட்டி Choi.

1978ஆம் ஆண்டு ஹாங்காங் சென்றபோது அவரது விருப்பமின்றி, வடகொரியாவுக்கு அவர் கடத்தப்பட்டார்.

அதையடுத்து சில நாட்களில் அவரது முன்னாள் கணவரும் முன்னணித் திரைப்பட இயக்குநருமான Shin Sang-okஉம் வடகொரியாவுக்குக் கடத்தப்பட்டார்.

மறைந்த திரு. கிம்மின் கட்டாயத்தின்பேரில் அவர்கள் மீண்டும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

இருவரும் சுமார் 8ஆண்டில் 10 திரைப்படங்களை உருவாக்கப் பணிக்கப்பட்டனர்.

கொள்கைப் பிரச்சாரப் படங்கள் மட்டுமின்றி கலையம்சம் கொண்ட திரைப்படங்கள் தயாரிக்கவும் அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

1985இல் "சால்ட்" என்ற படத்தில் நடித்ததற்காகத் திருவாட்டி Choi மாஸ்கோ திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார்.

1986இல் வியன்னா திரைப்பட விழாவுக்குச் சென்றிருந்தபோது அந்தத் தம்பதி வடகொரியர்களின் கண்காணிப்பிலிருந்து தப்பிச்சென்று அமெரிக்க தூதரகத்திடம் புகலிடம் தேடினர்.

1999ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து தென் கொரியா திரும்பினர்.

திரைப்படப் பிரியரான மறைந்த திரு. கிம், தங்களை மரியாதையாக நடத்தியதாகவும், முழு ஆதரவு தந்ததாகவும் 2011ஆம் ஆண்டு நேர்காணலில் திருவாட்டி Choi கூறினார். இருப்பினும், கடத்தியதன் தொடர்பில் அவரை மன்னிக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.

கொரியப் போருக்குப் பின்னர் வடகொரிய அரசாங்கத்தின் ஆதரவுடன் நூற்றுக் கணக்கான தென் கொரியர்கள் கடத்தப்பட்டனர்.

1942ஆம் ஆண்டிலிருந்து கொரியத் திரையுலகின் முடிசூடா ராணியாகப் போற்றப்பட்ட திருவாட்டி Choiயின் இறுதிச் சடங்குகள் நாளை மறுநாள் சோலில் நடைபெறும். 

உங்கள் கருத்து

Top