Images
  • Starbucks Apology
    (படம்: REUTERS/Mike Blake/File Photo)

வாடிக்கையாளருக்குச் சேவை வழங்க மறுத்த Starbucks ஊழியருக்கு $57,000 நன்கொடை...ஏன்?

Facebook-இல் பதிவுசெய்யப்பட்ட கண்டனத்தால், Starbucks கடை ஊழியர் ஒருவருக்கு 57,000 டாலருக்கும் அதிகமான அன்பளிப்புப் பணம் வந்து குவிந்துள்ளது!

ஏம்பர் லீன் கீல்ஸ் எனும் அமெரிக்கப் பெண், தாம் முகக் கவசம் அணியாமல் சென்றதால் கடை ஊழியர் தமக்குச் சேவையளிக்க மறுத்ததைக் குறைகூறி Facebook-இல் கண்டனப் பதிவு ஒன்றை இட்டார்.

சான் டியாகோ நகரில் உள்ள அந்தக் கடையில், சேவை வழங்க மறுத்த வாடிக்கையாளர் சேவை அதிகாரியான லெனின் குட்டரெஸ் (Lenin Gutierrez) படத்தையும் அவர் இணைத்திருந்தார்.

அடுத்த முறை மருத்துவ ரீதியாக முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கும் கடிதத்தை எடுத்துச் சென்று காவல்துறை வரும்வரை காத்திருக்கப் போவதாக அவர் கோபத்தோடு எழுதியிருந்தார்.

ஆனால் அவர் எதிர்பாராவிதமாக, திரு. லெனினை ஆதரிக்கும் பதிவுகளே ஆயிரக்கணக்கில் குவிந்தன.

50,000க்கும் அதிகமான மறுபதிவுகள், 100,00க்கும் அதிகமான விமர்சனங்கள்!

பலர் லெனினுக்கே ஆறுதலாகவும் ஆதரவாகவும் எழுதினர்.

கடமையை முறையாகச் செய்த லெனினுக்கு “டிப்ஸ்” கொடுக்க ஆசைப்பட்ட சிலர், லெனினுக்காக இணையம்வழி நிதி திரட்டினர்.

மூன்றே நாளில் 57,000 டாலர் திரண்டதாக New York Post-இல் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமக்கு இத்தனை பேர் ஆதரவு தருவதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றுகூறிய திரு. லெனின் அனைவருக்கும் நன்றி தெரிவித்து சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றைப் பதிவேற்றியுள்ளார். 

Top