Images
  • kangaroo
    (படம்: Reuters)

ஆஸ்திரேலியா: சிட்னியில் எப்போதும் இல்லாத வேகத்தில் குறையும் தண்ணீர் இருப்பு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நகரான சிட்னியில் தண்ணீர் இருப்பு இதுவரை இல்லாத வேகமான விகிதத்தில் குறைந்து வருவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இதுவரை பதிவாகியுள்ள ஆக மோசமான வறட்சி காரணமாக அணைகளில் நீர்மட்டம், உச்ச அளவில் பாதிக்கும் குறைவான நிலைக்கு இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகருக்கு ஆக அதிகமாகத் தண்ணீர் விநியோகம் செய்யும் வர்ரகம்பா அணையில் தண்ணீர் அளவு ஓராண்டில் 17 புள்ளி 8 விழுக்காடு குறைந்து 51 புள்ளி 4 விழுக்காடாக உள்ளது.

ஈராண்டுக்கு முன் இருந்த அளவில் அது பாதிதான்.

ஓராண்டுக்கு முன்பு அணைக்கு வந்த நீர்வரத்தில் 10 விழுக்காடுதான் இப்போது வருவதாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தண்ணீர்க் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்தது.

சிட்னியின் 11 அணைகளில் இப்போதுள்ள மொத்தத் தண்ணீர் அளவு 50 புள்ளி 1 விழுக்காடு மட்டுமே.

அதன் காரணமாக அண்மை மாதங்களில் அதிகாரிகள் தண்ணீர்க் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளனர்.

தற்போதைய சரிவு தொடர்ந்தால், மழையைக் கருத்தில் கொள்ளாமல், நகரின் அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு மேலும் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
 

Top