Images
  • fish
    Reuters

உகாண்டா ஏரியில் செத்து மிதக்கும் நைல் பெர்ச் மீன்கள். ஆனால், மற்ற மீன்களுக்கு பாதிப்பில்லை - குழப்பத்தில் மக்கள்

உகாண்டாவின் விக்டோரியா ஏரியில் (Lake Victoria) அதிகமான நைல் பெர்ச் (Nile perch) மீன்கள் இறந்து மிதப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஆனால், ஏன் அவ்வாறு நடக்கிறது என்ற காரணம் தெரியவில்லை.

நைல் பெர்ச் மீன்கள் திடீரெனச் செத்து மிதப்பது, சுற்றியுள்ள சமூகங்களின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

மீன் விற்பனையாளர் ஒருவர், அச்சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

"நைல் பெர்ச் வகை மீன்கள் மட்டும் ஏன் மாண்டு வருகின்றன என்று எங்களுக்குத் தெரியவில்லை, மற்ற மீன் வகைகள் ஏதும் இறக்கவில்லை" என்று அவர் விவரித்தார்.

உகாண்டாவின் வேளாண், மீன்வளத்துறை அமைச்சு, ஏரியிலுள்ள உயிர்வாயுவின் அளவு குறைந்து மீன்கள் மாண்டு போகக்கூடுமெனக் குறிப்பிட்டது.

இருப்பினும் அப்பகுதி மீனவர்கள், அந்த வகை மீன்கள் முன்னைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் மடிகின்றன என்று தெரிவித்தனர்.

விக்டோரியா ஏரிக்கு அருகிலுள்ள தொழிற்சாலைகள், பண்ணைகள், குடியிருப்புகள் கடந்த ஆண்டுகளில் விக்டோரியா ஏரியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்பட்டது.

மீன்களின் மரணத்துக்குரிய உறுதியான காரணத்தைத் தீர்மானிக்க, மேலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏரியில் ஏற்பட்ட மாசுக்கலப்பு, மீன்களைக் கொன்றிருக்கலாம் என்று அஞ்சும் மக்கள், அதில் அடிக்கடி நீந்தி விளையாடும் குழந்தைகளின் பாதுகாப்புக் குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.  

Top