Images
  • ukraine
    படம்: REUTERS

உக்ரேனிய விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரம் - விசாரணைக்காகச் சிலரைத் தடுத்து வைத்துள்ள ஈரானிய நீதித்துறை

உக்ரேனியப் பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்டதன் தொடர்பில் சிலர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஈரானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.

விமானம் வீழ்த்தப்பட்டதன் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக ஈரானிய நீதித்துறைப் பேச்சாளர் குலாம் ஹுஸைன் இஸ்மாயில் கூறினார். ஆனால், அவர் அது பற்றிய கூடுதல் தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.

இதற்கிடையே, விமானம் வீழ்த்தப்பட்டதன் தொடர்பில் விசாரணை நடத்தச் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஈரானிய அதிபர் ஹஸன் ரூஹானி கூறியுள்ளார்.

சென்ற வாரம், டெஹ்ரானிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதிலிருந்த 176 பேரும் மாண்டனர்.

முதலில் அதை மறுத்த ஈரானிய இராணுவம், தவறுதலாய் விமானத்தை வீழ்த்தியதைப் பின்னர் ஒப்புக்கொண்டது.

விமானம் வீழ்த்தப்பட்டதன் தொடர்பில் ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி கமைனியும், சம்பந்தப்பட்ட தலைவர்களும் பதவி விலக வேண்டும் என்று மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், ஈரானிய அதிபர் ரூஹானி, தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

விமானம் வீழ்த்தப்பட்டதன் தொடர்பில் விசாரணை நடத்த உயர்நிலை நீதிபதியும், பத்துக்கும் அதிகமான நிபுணர்களும் கொண்ட சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பான வழக்கு சாதாரணமானது அல்ல. ஒட்டுமொத்த உலகமும் அந்த வழக்கு விசாரணையை உன்னிப்பாய் கவனிக்கும் என்றும் ரூஹானி கூறினார்.   

Top