Images
  • us covid (1)
    (படம்: REUTERS/Mario Anzuoni)

அமெரிக்கா: 6 நாள்களில் ஒரு மில்லியன் பேருக்குக் கிருமித்தொற்று

அமெரிக்காவில், கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியுள்ளது.

அங்கு மாண்டோர் எண்ணிக்கை 250,000க்கும் அதிகம்.

உலகிலேயே கிருமிப்பரவலால் ஆகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா.

6 நாள்களில், ஒரு மில்லியன் பேருக்குப் புதிதாக நோய் தொற்றியது.

பொதுச் சுகாதார வழிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்றத் தவறினால், மிதமிஞ்சிய அளவில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க நாட்டின் சுகாதாரத்துறை திணறக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வரும் வியாழக்கிழமை அனுசரிக்கப்படும் Thanksgiving பொது விடுமுறையின்போது, பயணம் மேற்கொள்வதையும், மற்ற குடும்பங்களோடு ஒன்றுகூடுவதையும் தவிர்க்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிபர் டோனல்ட் டிரம்ப்பும், அடுத்த அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள திரு. ஜோ பைடனும், தேசிய அளவிலான முடக்கநிலையை அறிவிக்க விரும்பவில்லை.

மாநிலங்கள், சொந்தக் கட்டுப்பாடுகளை விதிப்பதை அவர்கள் ஆதரிக்கின்றனர்.

இம்மாதத்தில் மட்டும், 20க்கும் அதிகமான மாநிலங்கள், கட்டாயமாக முகக்கவசம் அணிவது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

கலிஃபோர்னியாவில் இன்று, இரவுநேர ஊரடங்கு நடப்புக்கு வரவுள்ளது. அது, அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை நடப்பில் இருக்கும்.

டெக்ஸஸ் மாநிலத்துக்கு அடுத்தபடியாக, கலிஃபோர்னியாவில் ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

Top