Images
  • German bomb found
    (படம்: AFP)

அமெரிக்கா : வெடிகுண்டு தயாரிக்கும் பொருள்களை வைத்திருந்த ஆடவர் கைது

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் பாதுகாவலர் ஒருவர் அவரது வீட்டில் வெடி குண்டு தயாரிக்கும் பொருள்களை வைத்திருந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவருடைய வீட்டைச் சோதனையிட்டபோது, வெள்ளை இன ஆதிக்கப்போக்கை ஆதரிக்கும் கருத்துகளை அவர் இணையம் வழி பரப்பிவருவது தெரியவந்தது.

வெள்ளை இன ஆதிக்கப்போக்கு உள்ளவர்களிடம் அந்த ஆடவர் தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்தது.

கோனோர் கிலிமோ (Conor Climo), என்னும் 23 வயது ஆடவர் யூத ஆலயம் ஒன்றைத் தாக்குவது பற்றி விவாதித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் அவர், ஓரினப் புணர்ச்சியாளர்கள் கூடுவதாக நம்பப்படும் இசை, மதுக்கூடமொன்றைக் கண்காணித்து வந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

2016ஆம் ஆண்டு ஒரு கத்தியையும் துப்பாக்கியையும் ஏந்தியபடி கிலிமோ சாலையில் நடந்து வந்தது குறித்து, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆடவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் 250,000 டாலர் அபராதமும் விதிக்கப்படலாம். 

Top