Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கத் துணையதிபராகப் போட்டியிடும் கமலா ஹேரிஸ்...யார் இவர்?

அமெரிக்காவில், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பைடன், துணை அதிபராகத் திருவாட்டி கமலா ஹேரிஸைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்கத் துணையதிபராகப் போட்டியிடும் கமலா ஹேரிஸ்...யார் இவர்?

படம்: AFP / SAUL LOEB

அமெரிக்காவில், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பைடன், துணை அதிபராகத் திருவாட்டி கமலா ஹேரிஸைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

யார் இந்த கமலா ஹேரிஸ்? இவரது பின்புலம் என்ன? 

  • கலிஃபோர்னியா செனட்டரான திருவாட்டி ஹேரிஸ், இரண்டு வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர்.
  • தாயார் இந்தியாவைச் சேர்ந்தவர்; தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர்.
  • பெற்றோரின் விவாகரத்திற்குப் பின், இந்து சமயத்தைச் சேர்ந்த அவரது தாயாரான திருவாட்டி ஷாமளா கோபாலன், தமது இரண்டு மகள்களையும் வளர்த்தார்.
  • திருவாட்டி கமலா ஹேரிஸுக்கு மாயா என்ற தங்கை இருக்கிறார்.
  • திருவாட்டி மாயாவும் ஒரு வழக்குரைஞர், அரசியல் ஆய்வாளர்.
  • புற்றுநோய் ஆய்வாளரான திருவாட்டி ஹேரிஸின் தாயார், இந்தியப் பாரம்பரியங்களைக் கற்றுக்கொடுத்துத் தமது இரு மகள்களையும் வளர்த்ததாக BBC செய்தி நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிட்டது.
  • மக்கள் உரிமை ஆர்வலரான திருவாட்டி ஹேரிஸின் தாயார், ஆக்லந்தில் கறுப்பினக் கலாசாரத்துடன் இணங்க, தங்களை வளர்த்து ஆளாக்கியதாகத் திருவாட்டி ஹேரிஸ் கூறியிருக்கிறார்.
  • திருவாட்டி ஹேரிஸ் தமது தாயார், தங்கையோடு கனடாவில் 5 ஆண்டுகள் வசித்த அனுபவமுள்ளவர்.
  • சமுதாயம் தங்களைக் கறுப்பினத்தவராகவே கருதும் என்று அறிந்த தமது தாயார், துணிவும், நம்பிக்கையும், பெருமையும் மிகுந்த பெண்களாகத் தங்களைப் பார்க்க விரும்பியதாகத் திருவாட்டி ஹேரிஸ் குறிப்பிடுகிறார்.
  • கலிஃபோர்னியப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்ற திருவாட்டி ஹேரிஸ், 2003ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட வழக்குரைஞரானார்.
  • அதன்பின், கலிஃபோர்னியாவின் முதல் பெண், கறுப்பினத் தலைமைச் சட்ட அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
  • இரு தவணைக் காலம் அந்தப் பொறுப்பில் இருந்தபோது அவரது அரசியல் செல்வாக்கு அதிகரித்தது.
  • ஜனநாயகக் கட்சியின் வளர்ந்துவரும் அரசியல் தலைவராக அவர் கருதப்பட்டார்.
  • பல்வேறு மனித உரிமைப் பிரச்சினைகளைத் திறம்படக் கையாண்டு புகழ்பெற்றார்.
  • 2014 ஆம் ஆண்டு திருவாட்டி ஹேரிஸ், டக்லஸ் எம்ஹோஃப் (Douglas Emhoff) என்னும் வழக்குரைஞரை மணந்தார்.
  • கலிஃபோர்னியா மாநில செனட்டராகப் பொறுப்பேற்ற பிறகு திருவாட்டி ஹேரிஸ், பல முக்கிய விவகாரங்களில் செனட் சபையில் கேள்வி எழுப்பினார்.
  • சென்ற ஆண்டுத் தொடக்கத்தில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தம்மை முன்னிறுத்தினார் திருவாட்டி ஹேரிஸ். ஆக்லந்தில் 20,000 பேர் முன்னிலையில் அவர் அதனை அறிவித்தார்.
  • இருப்பினும், தமது பிரசார வாதங்களை அவர் தெளிவாக முன்வைக்கவில்லை என்று குறைகூறப்பட்டது. மேலும் சுகாதாரப் பராமரிப்புக் கொள்கைகளுக்கு அவர் அளித்த விளக்கம் திருப்தியளிக்கும் விதமாக இல்லை என்ற கருத்தும் நிலவியது.
  • சென்ற ஆண்டு இறுதியில் அதிபர் போட்டியிலிருந்து விலகுவதாகத் திருவாட்டி ஹேரிஸ் அறிவித்தார்.
  • இந்த ஆண்டு மார்ச் மாதம், முன்னாள் துணையதிபர் ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவது உறுதியானதும், திருவாட்டி ஹேரிஸ் அவருக்குத் தமது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக அறிவித்தார். 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்