Images
  • WHO Research
    (படம்: AFP/Fabrice Coffrini)

அவசர நிகழ்வுகளுக்கான அனைத்துலகப் பயணங்களுக்கு முன்னுரிமை அளிக்க உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரை

அவசர நிகழ்வுகளுக்கான அனைத்துலகப் பயணங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. நாடுகள் அபாய நிலையை நன்கு பரிசீலித்த பின்னரே அனைத்துலப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தவேண்டும் என்றும் அது நேற்று (ஜூலை 30) தெரிவித்தது.

அவசர நிகழ்வுகள், மனிதாபிமான நடவடிக்கைகளோடு அத்தியாவசிய ஊழியர்கள் அல்லது தாயகம் திரும்புவோருக்கான பயணங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றது உலக நிறுவனம்.

உலகில் பல பகுதிகளில் கிருமிப்பரவல் மீண்டும் தலையெடுத்துள்ளதால், பல நாடுகள் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன.

உள்ளூரில் நோய் பரவும் விதம், ஏற்கனவே நடப்பில் உள்ள சுகாதாரச் சமூக நடைமுறைகள் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் அதன் அண்மைப் பயண ஆலோசனையில் குறிப்பிட்டது.

உள்நாட்டு நிலவரத்தையும் என்னென்ன அபாயங்கள் நேரலாம் என்பதையும் உலக நாடுகள் முதலில் பரிசீலிக்கவேண்டும்; அதன் பிறகே நாட்டிற்கு வரும் அனைத்துப் பயணிகளையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை அவை மேற்கொள்ளவேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டது.

அனைத்துலகப் பயணங்களைக் காலவரம்பின்றித் தடைசெய்யமுடியாது என்றும் உள்நாட்டில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த நாடுகள் மேலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அது ஆலோசனை கூறியது.

பயணிகள் விமானங்களில் முகக் கவசங்களை அணிவதோடு நோய்ப்பரவல் நிலவரத்தை நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்றும் உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.  

Top