Images
  • Climate Change Businesses
    (படம்: Pixabay)

உலக நாடுகள் பருவநிலை மாற்றத்திற்குக் கட்டாயம் தயாராக வேண்டும் : பான் கீ மூன்

உலக நாடுகள் பருவநிலை மாற்றத்திற்குக் கட்டாயம் தயாராகவேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றத்திற்குத் தற்போதிருந்தே தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இழப்பு பலமடங்காக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள அடுத்த 10 ஆண்டுகளில் 1.8 டிரில்லியன் டாலர் தேவை என்று பருவநிலை அமைப்பான Global Commission on Adaptation தெரிவித்தது.

உலகநாடுகள் பருவநிலை மாற்றம் தொடர்பில் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்று அது கூறியது.

முன்னெச்சரிக்கைக் கருவிகள், பருவநிலைப் பாதிப்பைத் தாக்குப்பிடிக்கும் உள்கட்டமைப்பு, சதுப்புநிலப் பாதுகாப்பு, சிறந்த விவசாய முறைகள், நீர்வளத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நாடுகள் கவனம் செலுத்தவேண்டும் என்று திரு. பான் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளை 2030ஆம் ஆண்டுக்குள் எடுக்கத் தவறினால்
வளரும் நாடுகளின் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்
வறுமை நிலைக்குத் தள்ளப்படலாம் என்று அவர் கூறினார்.


 

Top