Images
  • fire
    (படம்: Geoffroy VAN DER HASSELT/AFP)

பாரிஸ் தேவாலயத் தீச் சம்பவம் - உலகத் தலைவர்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்

(வாசிப்பு நேரம்: சுமார் 1 நிமிடம்)

உலகத் தலைவர்கள் பலரும் பாரிஸ் தேவாலயத் தீச் சம்பவம் குறித்து அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்துள்ளனர்.

பிரெஞ்சு மக்களுக்குத் தங்கள் ஆதரவையும் அவர்கள் தெரிவித்துக்கொண்டனர்.

12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட Notre Dame தேவாலயம், UNESCO மரபுடைமைத் தலங்களில் ஒன்று.

அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அதனை மீண்டும் புனரமைக்க உறுதியளித்துள்ளார். நம்மில் ஒரு பகுதி தீக்கிரையாவதைக் காண வருத்தமாய் இருக்கிறது என்று தமது Twitter பதிவில் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அந்தத் தேவாலயம் உலகின் அரிய பொக்கிஷங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டார்; இந்தத் துயரமான நேரத்தில் தமது எண்ணங்கள் பிரெஞ்சு மக்களுடன் ஒன்றுபட்டிருப்பதாக அவர் கூறினார்.

ஜெர்மானியப் பிரதமர் Angela Merkel, Notre Dame தேவாலயம், ஃபிரான்ஸின் அடையாளம் மட்டுமல்ல; ஐரோப்பியக் கலாசாரத்தின் அடையாளம் என்று குறிப்பிட்டார்.

பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, பிரெஞ்சு மக்கள், தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பாளர்கள் ஆகியோருடன் தமது எண்ணங்கள் ஒன்றுபட்டிருப்பதாகக் கூறினார்.

தீச்சம்பவம் குறித்து அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்துக்கொண்ட வத்திகன், தீயணைப்பாளர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், Notre Dame தேவாலயத் தீச்சம்பவம், பயங்கரமான காட்சி என்று வருணித்துள்ளார்.

Top