Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

பத்துமலையில் பக்தர்கள் விதி மீறல்... 17 ஆம் தேதி வரை காவடிகளுக்கு அனுமதி இல்லை

வாசிப்புநேரம் -

மலேசியாவில் சிறப்பாக நடைபெறும் திருவிழா தைப்பூசம். 

வரும் 18 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், மலேசியாவின் பத்துமலைத் திருத்தலத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பே பக்தர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தத் தொடங்கி விடுவர். அது காலம் காலமாக நடந்துவரும் வழக்கம்.

கோவிட்-19 தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மலேசியா முடக்கத்தில் இருந்தது. அதனால் சிறிய அளவில் திருவிழா நடந்தது. இவ்வாண்டு மேலும் அதிகக் கட்டுப்பாடுகளுடன் தைப்பூசத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்துமலையில் பக்தர்கள் விதிகளை மீறியதன் தொடர்பில் கோலாலம்பூர் ஸ்ரீ மாரியம்மன் தேவஸ்தானத்திற்குக் காவல்துறை அபராதம் விதித்தது. 

இறுதி நேரத்தில் சர்ச்சைகளைத் தவிர்க்க, முன்கூட்டியே நேர்த்திக் கடனைச் செலுத்துமாறு  தேவஸ்தானம் பக்தர்களைக் கேட்டுக்கொண்டது. 

அதற்காக அங்கு சென்ற சென்ற பக்தர்களில்  பலர் விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளனர். 

உறுமிமேளம், போங்கோ என பல தாள வாத்தியங்களை இசைத்துள்ளனர். முகக் கவசம் அணியாமல் பலர் கூட்டம் கூட்டமாக நின்றனர். அது பற்றிய காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவின. 

எனவே, இவ்வாண்டு திட்டமிட்டபடி தைப்பூசத் திருவிழா நடைபெறுமா என்ற  சந்தேகம் எழுந்துள்ளது. உலக அளவில், மீண்டும் கோவிட்-19 அச்சம் சூழ்ந்திருப்பதால், இறுதி நிமிடத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

(கோப்புப் படம்)

மீண்டும் விதி மீறலைத் தவிர்க்க,  வரும் 17 ஆம் தேதி வரை காவடிகளுக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்தானத் தலைவர் நடராஜா காணொளி மூலம் அறிவித்தார்.

"விதி மீறலைத் தடுப்பதில் தேவஸ்தானம் முழுக் கவனம் செலுத்தவுள்ளது. தைப்பூசத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பது மிக அவசியம்.''

வரும் நாட்களில் நேர்த்திக் கடன் செலுத்தவுள்ள பக்தர்கள் விழிப்புடன் விதிகளை மதித்து நடந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

16 இலிருந்து 19ஆம் தேதி வரை மொத்தம் 200 காவடிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஒவ்வொரு காவடிக்கும் 10 பேர் மட்டுமே உடன் வர அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. காவடி எடுப்போர் இணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். 

பால் குடம் நேர்த்திக் கடன் செலுத்த ஒரு நேரத்திற்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இடையிடையே தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும்.

இயன்றவரை தைப்பூச நாளுக்கு முன்பே பால்குட வேண்டுதலைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

முன்பதிவு செய்த பக்தர்கள் 1,000 பேர் தேர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளலாம். 

கோலாலம்பூர் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து பத்துமலைத் திருத்தலத்திற்குச் செல்லும் வழியில் 10 இடங்களில் மட்டுமே தேரை நிறுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa