வசீகரிக்கும் வாசனை
உங்களுக்கு எந்தெந்த வாசனை பிடிக்கும் ? எந்தெந்த வாசனை பிடிக்காது ? இதைப் பற்றிப் பேசலாமே !...
உங்களுக்கு எந்தெந்த வாசனை பிடிக்கும் ? எந்தெந்த வாசனை பிடிக்காது ? இதைப் பற்றிப் பேசலாமே !...
எனக்கு காப்பிக் கொட்டை வறுபடும் வாசனை மிகவும் பிடிக்கும். உங்களுக்குமா ?
ஆகா.. ஒரு ஹை ஃபைவ் உங்களோடு..
மழைத் துளி மண்ணில் பட்டதும் ஒரு வாசனை வருமே.. மண் வாசனை.. பிடிக்காது என்று சொல்ல எவருக்கு மனம் வரும் ?
புதுப் புத்தகத்தைப் பிரித்தால் வரும் வாசனை, பசியோடு இருக்கும்போது வரும் உணவு வாசனை, ஆரஞ்சுப் பழங்களை உரிக்கும்போது புறப்படும் வாசனை, நல்ல சோப்பிலிருந்து வரும் நறுமணம், மொடமொடப்பான புதுப் பணத்திலிருந்து புறப்படும் அச்சு வாசனை...
இந்திய மளிகைக் கடைகளில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட காட்டமான மசாலா வாசனை, பலாப் பழத்தைப் பிளந்ததும் குபுக்கென்று குதித்து வெளியேவரும் சுளைகளின் சுகந்தம், மாம்பழமோ வாழைப்பழமோ கனிந்ததும் அவை நம்மைக் கைநீட்டி அழைக்காத குறையாய் அனுப்பும் வாசனை...
அம்மா அதிரசம் செய்ய வெல்லப் பாகு காய்ச்சும் வாசனை, வழிபாட்டறையில் வசிக்கும் சாம்பிராணி, ஊதுபத்தி, பூ வாசனை... இப்படி என்னைவிட்டால் வாசனைப் பட்டியலை வாசித்துக் கொண்டே போவேன்.
விலை உயர்ந்த வாசனைத் திரவமாக இருந்தாலும்கூட அடர்த்தியான அதன் நறுமணம் எனக்கு ஒவ்வாமையை உண்டாக்கித் தலைவலியை உருவாக்கிவிடும். இதன் காரணமாக எந்த வாசனைத் திரவத்தையும் என்னால் தெளித்துக் கொள்ள முடியாது. செயற்கைத் திரவங்களை விடுங்கள், இயற்கையான ஜவ்வாது, மருக்கொழுந்து வாசனைப் பொடி கூட ஆகாது எனக்கு. ஆனால், தொலைவில் அளவோடு இருந்தால் அந்த சுகந்தம் சுகமே !
இதைப் படிக்கும்போது ஒருகணம் நிறுத்திவிட்டு உங்களுக்குப் பிடித்தமான பல்வேறு வாசனைகளைப் பட்டியல் போட்டுப் பாருங்கள்...
ஆயிற்றா ? சரி ஒவ்வொரு வாசனையை நினைத்துப் பார்க்கும்போதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? என்னைப் பொறுத்தவரை முதன் முதலாக அந்த வாசனையை உணர்ந்த இடம், வயது, சம்பவம் நினைவுக்கு வரும்.
சில மனிதர்களையும் இடங்களையும் நாம் வாசனை வழியாகவே நினைவில் வைத்திருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வேன். சில உணர்வுகளும்கூட வாசனைக்கு நெருக்கமானவை.
உணவங்காடி என்றாலே எனக்கு அடர்த்தியான காப்பியின் நறுமணமும், கோழிச் சோற்று மணமும்தான் நினைவில் எழும். மற்ற வாசனையெல்லாம் அதற்குப் பிறகுதான்.
என்னுடைய கல்லூரிப் பருவத்தில், என் நண்பரின் உறவினருடைய பெரிய ரோஜாத் தோட்டத்திற்குச் சென்ற அனுபவத்தை நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன்.
கலப்பின ரோஜாத் தோட்டமல்ல அது. மலைமேல் மலரும் பூக்களைப் போல் வண்ண வண்ணக் கலப்பின ரோஜாக்களுக்கும் நல்ல வாசனை இருக்காது. இயற்கையான இளஞ்சிவப்பு ரோஜாத் தோட்டம் நான் சென்றது.
அடேயப்பா.. ஏனடா நமக்கு இயற்கை ஒரே ஒரு மூக்கைப் படைத்தது ? ஓரிரண்டு கூடுதலாகப் படைத்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைத்த அனுபவம் அது.
மணமுள்ள மலர்கள் கிடைத்தால் அவற்றை ஒரு கிண்ணத்தில் இட்டு வரவேற்பறையில் வைத்தால்போதும். எந்த நாளையும் இனிய நாளாக்கிவிடும் அந்த வாசனை.
வாசனைப் பிரியர்கள் மொகலாயர்களுக்குக் கடமைப்பட்டவர்கள். ரோஜாப் பூக்களில் இருந்து அத்தரை வடித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை அவர்கள்தான் இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்களாம்.
வாசனையின் வல்லமையைக் குறைத்து எடைபோட்டுவிட முடியாது.
பெட்ரோல் வாசனைக்கு அடிமையான சிலர், அதைத் தொடர்ந்து நுகர்ந்து கொண்டிருப்பதற்காகவே பெட்ரோல் நிலையங்களில் வேலைக்குச் சேருவதுண்டு எனப் படித்திருக்கிறேன்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பிரபல விமான நிறுவனங்கள் சில, தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கெனத் தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட வாசனைத் திரவக் குடுவைகளைப் பரிசாக அளிப்பதுண்டு.
விமானத்திற்குள் எப்போதும் மெல்லிய சுகந்தம் பரவும் வகையில் ஏற்பாடு செய்கின்றன பல விமான நிறுவனங்கள்.
அந்த வாசனையால் ஈர்க்கப்படும் நீங்கள், உங்களையும் அறியாமல் மீண்டும் மீண்டும் அதே விமான நிறுவனத்தை உங்கள் அடுத்தடுத்த பயணங்களுக்குத் தெரிவு செய்வீர்களாம்.
பெரிய பெரிய கடைத் தொகுதிகளும், தங்கும் விடுதிகளும், நட்சத்திர ஹோட்டல்களும்கூட இந்த உபாயத்தைப் பின்பற்றுகின்றன.
காரணமின்றி ஒருவரை நாம் நேசிப்பதற்கும் ஒருவரை வெறுப்பதற்கும்கூட அவர்களிடம் இருந்து பரவும் வாசனை காரணமாக இருக்கலாம்.
சிறு குழந்தைகளும் விலங்குகளும் தங்கள் தாயை அடையாளம் காண்பது வாசனை மூலமாகத்தான்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் Today நாளேட்டில் ஒரு பெண்மணி எழுதிய கட்டுரையை என்னால் மறக்கமுடியாது.
அலுவலக வேலை காரணமாக வெளிநாட்டுக்குச் செல்லும்போது அவர், தனது குழந்தைகளின் துவைக்காத துணிகளை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்துச் சென்று "பிள்ளைகள் நினைவு வரும்போது அவற்றை எடுத்து மோந்து பார்த்துக் கொள்வேன்" என எழுதியிருந்தார்.
பிள்ளைகளின் உடல் வாசனை பிள்ளைகளுக்கே நிகர் என்கிறார் அந்தத் தாய்..
பிரபல வாசனைத் திரவத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுடைய தயாரிப்புகளை மோந்து பார்த்து மதிப்பிடுவதற்கென்றே நிபுணர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன.
தேயிலை நிறுவனங்கள், தேநீரைச் சுவைத்துப் பார்க்கும் நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவதுபோல..
வாசனைக் கில்லாடிகளான அவர்கள், ஒவ்வொரு வாசனைக் கலவையையும் மோந்து பார்த்துக் கருத்துச் சொல்வார்கள். அவர்கள் அங்கீகரித்த வாசனைக் கலவைதான் விற்பனைக்குவரும்.
இவர்களில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றுள்ள சிலர் தங்கள் மூக்கிற்கு மில்லியன் கணக்கான டாலரில் காப்புறுதி எடுத்திருக்கிறார்களாம். (எடுக்க மாட்டார்களா பின்னே ? வாழ்வாதாரம் ஆச்சே !)
திரைப்படங்களுக்கு வாசனையை அறிமுகம் செய்யும் முயற்சியும் நடந்துவருகிறது.
திரையில் தெரியும் காட்சிக்கு ஏற்பத் திரையரங்கில் வாசனைத் திரவம் தெளிக்கப்படும்.
கதாநாயகனும் நாயகியும் ஐரோப்பிய லாவண்டர் மலர்த் தோட்டத்தில் ஆடிப் பாடினால், ரசிகர்கள் லாவண்டர் மலர்களின் வாசனையை உணர முடியும்.
சிங்கப்பூரில் திகட்டத் திகட்ட விதவிதமான மலர்களின் வாசனையை அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்குச் சிறந்த இடம் கரையோரப் பூந்தோட்டம்தான்.
மனத்துக்குப் பிடித்த வாசனைக்கும் நம்மை மகிழ்விக்கும் ஆற்றலுண்டு என்கின்றனர் மலர் மருத்துவ நிபுணர்கள்.
வாழ்க்கையை வசதிமிக்கதாக்குவதோடு வாசனை மிகுந்ததாகவும் ஆக்கிக் கொண்டால், எப்போதும் வசந்தம்தான் !...