மறுபயனீடு... அவசியம் அவசரம்...
சிறுசிறு துளிகள் சேர்ந்தால்தானே பெருவெள்ளம்? துளிகளாக ஒன்றுசேர்வோம். நம்முடன் நம் துளிர்களும் அதைப் பின்பற்றச்செய்யலாம்.

மறுபயனீடு..
இன்றையச் சூழலில் பரவலாக நம் காதில் விழும் ஒரு வார்த்தை.
ஒரு பொருளைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியாமல் அதை மறுபடியும் வேறு வகையில் பயன்படுத்துவது.. இதுதான் அந்த வார்த்தையின் பொருள்.

முதலில் மறுபயனீட்டை வலியுறுத்துவதற்கான காரணம் என்ன?
தேவையற்ற பல பொருட்கள் வீசியெறியப்படும்போது அவை காலப்போக்கில் மக்கி மண்ணோடு மண்ணாகப் போவதில்லை.
சில பொருட்கள் மக்கிப்போக மாதக்கணக்கில் ஆகும். சில, ஆண்டுக்கணக்கில் ஆகும்.
சுற்றுச்சூழலுக்கு அவை கேட்டை விளைவிக்கின்றன.
எனவே பொருட்களை மறுபயனீடு செய்வது முக்கியமாகிறது.

ஆனாலும் பெரும்பங்கு நம் கையில்தான் இருக்கிறது என்பதையும் நாம் உணரவேண்டும்.

தொட்டதுக்கெல்லாம் நாம் பயன்படுத்தும் ஒன்று பிளாஸ்டிக்.
கடைக்குப் போனால் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் டப்பா, பிளாஸ்டிக் கரண்டி....
ஆனால் இவற்றில் கணிசமானவற்றைப் பலரும் ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்து விடுகிறோம். அதன் பின்விளைவுகளைப் பற்றி ஒரு விநாடிகூட யோசிப்பதில்லை.
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துப் பார்க்கலாமே.
மாறாக, உலோகப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.
கண்ணாடிப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.
காலத்துக்கும் இருக்குமே.
இதன் மூலம் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகிறோம் என்ற குற்றவுணர்வையும் தவிர்க்கலாம்.
அதே நேரம் பயனற்ற பிளாஸ்டிக் பொருளை முறையாக அப்புறப்படுத்துவதை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறோம்?
பொது இடங்களில் முன்பு அதற்குப் போதுமான வசதிகள் இல்லை.
ஆனால் இப்போது எங்கு பார்த்தாலும் வண்ணவண்ணப் பெட்டிகள் இருக்கின்றனவே..
காகிதமா, பிளாஸ்டிக்கா.. அவற்றைப் பிரித்துப்போடவும் வழியுண்டு. வசதி உண்டு. ஆயினும் அதை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம்?
பல நேரங்களில் வேண்டாத பொருட்களைக் கண்ட இடத்தில் வைத்துவிடுகிறோம் அல்லது கைக்கெட்டிய தூரத்தில் வீசிவிடுகிறோம்.
யாரேனும் பார்த்துவிடுவார்கள் என்ற கவலைகூட இருப்பதில்லை.
சோம்பேறித்தனம் அல்லது அலட்சியம்..
எந்தக் காரணமாக இருந்தாலும் சரி... அந்தப் போக்குச் சரியல்ல.

பெரும்பாலும் வீட்டில் பொருட்களை ஒதுக்கும்போதுதான் தெரியும் இத்தனை நாட்கள் எத்தனை பொருட்களை யோசிக்காமல் வீசியெறிந்திருக்கிறோம் என்று.
நாம் தூக்கியெறியும் பொருள் வேறு வடிவத்தில் நம்மிடமே வந்தசேர்கிறது.
இது விந்தைதானே. அதற்கு நாம் வழிவிடவேண்டும்.
முன்பைவிட இப்போது சமூகத்தில் நல்ல மாற்றம் தென்படுகிறது.
எல்லா மாற்றங்களும் நம் கையில் இல்லை.
ஆனால் நம் கையில் இருக்கும் எல்லாவற்றையும் செய்யலாமே.
மலைமலையாகச் சேகரிக்கப்படுகின்றன பிளாஸ்டிக் குப்பைகள்.
அவை சொல்லும் மறுபயனீட்டுத் திட்டம் கண்டுவரும் வெற்றியை.
இந்த வெற்றி குறித்த வேட்கை தொடரவேண்டும்.
சிறுசிறு துளிகள் சேர்ந்தால்தானே பெருவெள்ளம்?
துளிகளாக ஒன்றுசேர்வோம். நம்முடன் நம் துளிர்களும் அதைப் பின்பற்றச்செய்யலாம்.
மறுபயனீடு குறித்து செயலில் இறங்குவது அவசரம். அவசியம்.
சுத்தமான காற்று.
சுகாதாரமான சமூகம்.
சுகமான வாழ்க்கை.
அனுபவித்துத்தான் பார்ப்போமே.
