இலக்கியம் தேவையா ?
இலக்கியம் தேவையா ? இந்தக் கேள்வியை ஈராண்டுகளுக்கு முன் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனிடம் கேட்டேன். வாசகர் வட்ட நிகழ்ச்சிக்காகச் சிங்கப்பூர் வந்திருந்த அவரைத் தொலைக்காட்சிச் செய்திக்காக பேட்டி கண்டபோது நான் கேட்ட முதல் கேள்வி அதுதான். அதற்கு அவர் தந்த பதில் இன்றளவும் என் மனத்தில் இருக்கிறது.
இலக்கியம் தேவையா ? இந்தக் கேள்வியை ஈராண்டுகளுக்கு முன் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனிடம் கேட்டேன். வாசகர் வட்ட நிகழ்ச்சிக்காகச் சிங்கப்பூர் வந்திருந்த அவரைத் தொலைக்காட்சிச் செய்திக்காக பேட்டி கண்டபோது நான் கேட்ட முதல் கேள்வி அதுதான். அதற்கு அவர் தந்த பதில் இன்றளவும் என் மனத்தில் இருக்கிறது.
மனித வாழ்க்கையைச் செம்மையாக வாழ ஆயிரம் விதமான அனுபவங்கள் தேவை. ஆனால், நமக்கு இருப்பதோ ஒரே ஒரு வாழ்க்கை. என்ன செய்யலாம் ? எல்லா அனுபவங்களையும் அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் எத்தனை ஆயிரம் வாழ்க்கை தேவைப்படும் ? இது என்ன நடக்கிற காரியமா என்று தோன்றலாம். ஆனால் இதற்குரிய மிக எளிதான வழி அடுத்தவர் வாழ்ந்து பெற்ற அனுபவத்தைத் தெரிந்து கொண்டு அதைப் பின்பற்றுவது. தீர்ந்தது கதை.
இலக்கியம் அதைத்தான் செய்கிறது. ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கையை இலக்கியம் நம்மை வாழ வைக்கிறது. இதுதான் இலக்கியத்தின் பயன். இனி உங்கள் முடிவு இலக்கியம் தேவையா இல்லையா என்பது. இதுதான் அவரது பதிலின் சாரம்.
இலக்கியம் என்றால் கம்பனையும் வள்ளுவனையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டும் என்றில்லை. பொதுவான வாசிப்பு. பாடப் புத்தகம் தாண்டிய நல்ல புத்தகங்கள். சிங்கப்பூரைப் பொறுத்தவரை நல்ல புத்தகங்களை இரவலாகவே நூலகங்களில் வாங்கிப் படிக்க முடியும். பணம் கூடச் செலவழிக்க வேண்டியதில்லை. ஆர்வமும் கொஞ்சம் நேரமும் இருந்தால் போதும். இலக்கிய வாசிப்பு எவருக்கும் சாத்தியமே !
இலக்கியம் படித்தவர்களுக்கு அது பல வகையில் பலன் தருவதை நான் கண்கூடாகக் காண்கிறேன். நல்ல புத்தகங்கள் வாசிக்கக் கூடியவர்கள் இனிய சுபாவம் உள்ளவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். நல்ல உரையாடல்காரர்களாகவும் இருக்கின்றனர். கண்டிப்பாக அவர்களோடு பேசும்போது நமக்கு அயர்ச்சி வருவதில்லை, அலுப்புத் தட்டுவதில்லை. எங்கே அவர்களைக் கண்டாலும் நாம் ஓடி ஒளிவதில்லை. எப்போதும் ஏதோ ஒன்று அவர்களிடம் நாம் தெரிந்து கொள்ள இருக்கவே செய்கிறது.
இலக்கியம் படித்தவர்கள், மனிதர்களை வெறுப்பதில்லை. இது எழுத்தாளர் பிரபஞ்சன் எனக்குச் சொல்லிக் கொடுத்தது. இந்த உலகில் மனிதர்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு நாம் மகிழ்வாக இருந்துவிட முடியுமா என்று கேட்பார் அவர். மனிதர்கள் குறையுள்ளவர்கள். அவர்கள் அப்படித்தான். தாங்க முடியாத தீய குணம் கொண்டவர்களைக் கூடப் புறக்கணிக்கலாமே தவிர வெறுக்க வேண்டாமே என்கிறார் பிரபஞ்சன்.
சிரமம்தான் இதைப் பின்பற்றுவது. ஆனால், பின்பற்றிப் பார்த்தால் தெரியும் இதன் பலன். குறைந்தபட்சம் நம்முடைய மனநிம்மதிக்கு இதில் உத்தரவாதம் உண்டு. பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே ! என்று மகாகவி சொன்னதைப் பிரபஞ்சன் வேறு வார்த்தையில் சொல்கிறார் அவ்வளவுதான். “யார் என்ன செய்தாலும் தலையாட்டிக் கொண்டு ஏமாளியாகவே எப்போதும் இரு”-என்று தயவுசெய்து இதற்கு அர்த்தம் கற்பித்துக் கொள்ளாதீர்கள். சிறுமை கண்டு பொங்கவும் வேண்டும்தான். அதையும் பாரதிதான் சொல்லிச் சென்றிருக்கிறான்.
வஞ்சத்தை மனத்தில் வைத்துக் கொண்டு அலையாமல் இருப்போம். அதுதான் பிரபஞ்சன் சொல்ல வருவதன் அடிநாதம். இப்படிப்பட்ட பண்புகளை முயன்று வளர்த்துக் கொண்டோமென்றால் எல்லாருக்கும் நல்லவராகி விடமுடியும். அப்புறம் அதைவிட வேறென்ன நிம்மதி வேண்டும் மனிதருக்கு?
நல்ல இலக்கியம் படித்தவர்கள் இருக்குமிடத்தில் எப்போதும் இனிமை இருக்கிறது. அங்கே நல்ல சத்தான விவாதம் நடக்கிறது. ஒருவருக்கொருவர் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளும்போது எல்லாருமே ஒருபடி உயர்கிறோம்.
நீங்கள் உங்கள் அனுபவத்தில் யோசித்துப் பார்த்தாலே தெரியும், யாராவது ஒருவரிடம் ஒரு நல்ல யோசனை பெற வேண்டுமென நினைத்தால், பெரும்பாலும் அவர் நல்ல புத்தக வாசிப்பு உடையவராகவே இருப்பார். இல்லை ஒருதுறை சார்ந்த பழுத்த அனுபவசாலியாக இருப்பார்.
இலக்கியம் படிப்பதன் பலன்களை இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம் அடுத்தடுத்த கட்டுரைகளில்..
தோழமையுடன்,
பொன். மகாலிங்கம்.