Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா செய்தியில் மட்டும்

நூலில் சிக்கிக்கொண்டேன்!

வாசிப்புநேரம் -

‘உங்கள் வீட்டில் இத்தனை புத்தகங்களா?’

‘வாசிப்பதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?’

‘மணிக்கணக்கில் அதே புத்தகத்துடன் உட்கார்த்து இருக்கிறீர்களே. அப்படி அதில் என்னதான் உள்ளது?’

இதுபோன்ற பல கேள்விகளை என்னைத் தெரிந்தவர்கள் என்னிடம் கேட்பது உண்டு.

வாசிப்புப் பழக்கம் மிக இளம் வயதிலேயே எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று.

(படம்: Pixabay)

திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் முதலியவற்றில் கவனம் திசை திரும்பினால் கல்விப்பாடங்களில் தொய்வு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் என் பெற்றோரிடம் இருந்தது.

அதனால் இரவு 9 மணிக்கெல்லாம் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி நிறுத்தப்படும். ஒரு மணிநேரம் தூக்கம் வரும்வரை புத்தகம் வாசிக்கலாம். 

தூக்கத்தை வரவழைக்கத் தொடங்கப்பட்ட பழக்கம் தூக்கத்தைக் கெடுக்கும் பழக்கமாய் மாறிப்போனது.
உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சிறந்த எழுத்தாளர்களின் கதைகள், புதினம், சமையல், சமயம் என எங்கள் வீட்டில் ஒரு சிறிய நூலகமே காலப்போக்கில் உருவானது.

அதிகம் ஆங்கில நாவல்களையே படித்துக்கொண்டிருந்த என்னிடம் ஒருநாள் ‘நண்டு’ என்ற ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் அம்மா.

புற்றுநோயின் தீவிரத்தை நண்டின் குணாதிசயத்துடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார் கதாசிரியர் சிவசங்கரி.
அது முதல் தமிழ் நாவல்களையும் வாசிக்கத் தொடங்கினேன்.

பொதுவாக, முடிவைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவலில் மிக வேகமாய்ப் புத்தகத்தைப் படித்து முடித்துவிடுவேன்.

Pixabay

ஆனால் சில புத்தகங்களைப் படிக்கும்போது மட்டும், சில பக்கங்களில் இந்தக் கதாபாத்திரங்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிடுமே என மெதுவாய்ப் படிப்பதும் உண்டு.
அத்தகைய ஒரு புத்தகம் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’. 

கதையில் இடம்பெறும் அனைவரும் நல்லவர்களாகவே இருந்தும் கதை சுவாரஸ்யத்துடன் நகர்வது இந்த நாவலின் சிறப்பு.

தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருமே ஒரு முறையாவது படிக்கவேண்டிய புத்தகம் ‘பொன்னியின் செல்வன்’.

திரைப்படமாய் விரைவில் இது வெளியாகவிருக்கிறது.
என்றாலும், புத்தகத்தைப் படித்தவர்கள் அவரவர் கற்பனையில் உருவாக்கிய ‘பொன்னியின் செல்வனே’ மிகச் சிறந்தது என்பது என் தாழ்மையான கருத்து.
“No two persons read the same book” என்ற ஒரு வரி அண்மையில் என் கண்ணில் பட்டது. 

அதாவது  ஒரே புத்தகத்தை இருவர் படிக்கலாம்.
ஆனால், புத்தகத்தைப் பற்றிய அவர்களின் கண்ணோட்டம் வேறுபடும்.

‘நீங்களும் இந்தப் புத்தகத்தை படித்திருக்கிறீர்களா?’ என்ற கேள்வியைக் கேட்டால் நான் உற்சாகமாகிவிடுவேன்.

அதே புத்தகத்தை படித்த அந்த இன்னொருவர் அதை எப்படி விமர்சிக்கிறார் என்பதைக் கேட்பதில் எனக்குத் தனி ஆவல்.

நீங்கள் கடைசியாய்ப் படித்த புத்தகம் என்ன?
பேசுவோம்.
 

அன்புடன் 
ஷரளா தேவி கோபால்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa