ஈடு இணையற்ற இயற்கை
இயற்கை.. இதை எதிர்த்துப் போராடி வெல்ல இதுவரை யாரும் பிறக்கவில்லை, இனியும் பிறக்கப் போவதில்லை.

இயற்கை..
இதை எதிர்த்துப் போராடி வெல்ல இதுவரை யாரும் பிறக்கவில்லை, இனியும் பிறக்கப் போவதில்லை.
இதை நிரூபிக்க ஆய்வு தேவையில்லை, கல்விமான் தேவையில்லை.
தினம் தினம் நம் கண்முன் நிகழும் அத்தனையுமே அதற்குச் சான்று.
இயற்கைப் பேரிடராக இருக்கட்டும், இயல்பு வாழ்க்கையாக இருக்கட்டும்.
உங்களைச் சுற்றிப் பாருங்கள். அட.. ஆமாம் என்றுதான் சொல்வீர்கள்.

எந்த மனிதனின் உயிரையும் யாரும் பிடித்துநிறுத்த முடியாது.
சூறாவளி, நிலநடுக்கம்.... இவை வந்துவிட்டால் சில நேரங்களில் கோரதாண்டவம் ஆடிவிட்டுத்தான் செல்லும்.
தடுத்துத்தான் பாருங்களேன். முடியுமா?
வேண்டுமானால் புயல் வரப்போகிறது என்று கணித்துச் சொல்லலாம். வந்துவிட்டால் சேர்ந்து அனுபவிக்கவேண்டியதுதான்.
சூரியனில்லாத வானமுண்டா?
வெளிச்சம் இல்லாத பௌர்ணமி உண்டா?
என்னதான் அறிவியல், நிலவியல் என்றெல்லாம் சொன்னாலும் அவற்றையெல்லாம் கட்டிப்போட்டிருப்பது இயற்கைதான்.
இயற்கை நிகழ்வுகள் நல்லவையாகவும் இருக்கலாம், கெட்டவையாகவும் இருக்கலாம். ஆனால் அவை நிகழ்ந்தே தீரும்.
நல்லதை... நடப்பதுபடி நடக்கட்டும் என்று பெரிதுபடுத்துவதில்லை, பாராட்டுவதில்லை.
கெட்டதை... ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம், இயற்கையைத் திட்டித் தீர்க்கிறோம்.
நல்லது இயற்கையின் வரம் என்கிறோம். கெட்டது இயற்கையின் சீற்றம் என்கிறோம்.
இரண்டுமே இயற்கையின் இரு பக்கங்கள் என்று எண்ணிப்பார்க்க மனம் விரும்புவதில்லை.
செடி இப்படித்தான் வளரவேண்டும் என்று யார் அதற்குக் கற்றுக்கொடுத்தது?

தூங்கும்போதுகூட இதயம் துடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று யார் கட்டளையிட்டது?
திருமண பந்தத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மனப்பொருத்தம் முக்கியம் என்பார்கள்.
அது இரு மனங்களும் ஒரே சிந்தனை, செயல்களைக் கொண்டிருப்பது என்று அர்த்தமல்ல.
ஒத்துப்போனால் மனப்பொருத்தம் இருப்பதாகக் கூறுகிறோம். இது மனிதக் கணக்கு.
இயற்கையின் கணக்கு வேறு.
இப்படி ஒருத்தர் இருந்தால் அப்படி ஒருத்தர் இருப்பார்.
எதிரெதிர்த் துருவங்கள்தான் ஒன்றையொன்று ஈர்க்கும். இதற்கு மாற்றுக் கருத்தே இல்லை.
தாயின் வயிற்றில் பிறந்தாலும் வாயும் வயிறும் வேறுதான், குணமும் வேறுவேறுதான்.
நாம் அன்றாடம் பழகும் சக மனிதர்கள் பலவிதம்.
இப்படி நம்மைச் சுற்றிலும் எத்தனை எத்தனை எடுத்துக்காட்டுகள்!
எதையுமே நான் புதிதாகச் சொல்லவில்லை. எல்லாமே அனைவரும் அறிந்ததுதான்.
இருந்தாலும் கொஞ்சநேரமாவது இதுபற்றி யோசித்திருக்கிறோமா?
வாழ்க்கையின் ஓட்டத்தில் நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத சக்தியை எண்ணிப்பார்க்க நேரமில்லை.
நல்லது... நம்மை நகர்த்திச் செல்கிறது.
கெட்டது... நமக்குக் கற்றுத் தருகிறது.
வாழ்க்கைப் பாடத்தில் இயற்கை நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் எண்ணிலடங்கா.
என்ன நடந்தாலும் அதில் ஏதோ ஒன்று இருக்கிறது.

இயற்கை எதையோ சொல்லவருகிறது. அதைக் காதுகொடுத்துக் கேட்டால் வாழ்க்கையின் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும்.
ஒருவரைப் போல் மற்றவர் இல்லை. இந்தப் பக்குவம் ஏற்பட்டால் நமக்குள் ஒருவித மனஅமைதி கிடைக்கும்.
மற்றவர்களை மனதார ஏற்றுக்கொள்ள முடியும்.
இயற்கையை வெல்லும் ஆயுதம் இதுவரை யாருக்கும் கிடைத்ததில்லை.
அது என்றேனும் யாருக்கேனும் கிடைத்தால் எல்லாம் மாறலாம்!
