Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா செய்தியில் மட்டும்

பயமா? எனக்கா? நானும் தைரியசாலி தான்

வாசிப்புநேரம் -
தமிழில் எழுத பயம்...  எழுத்துப் பிழை ஏற்படும் என்று பயம். 
மேடையில் பேசப் பயம்... நகைச்சுவைப் பேச்சுப் பேசி, பிறர் என்னைக் கண்டு சிரிப்பார்கள் என்று பயம். 
மோட்டார் சைக்கிள் பயம்... அதில் பயணம் செய்து மலையின் உச்சிக்குச் செல்வதற்குப் பயம். 
உயர்மாடியில் நிற்கவே பயம்... அங்கிருந்து கீழே பார்க்க பயம். 

இப்படித் தான் "என் வாழ்வில் நான் கண்ட மிகப் பெரிய பயந்தாங்கோழி நீயாகத் தான் இருக்கவேண்டும்" என்று பலரும் என்னைக் கேலி செய்திருக்கின்றனர். 

தமிழில் எழுத, படிக்கப் பயம் தான்... ஆனால் 14 ஆண்டுகளாகத் தமிழ்த் துறையில் பணிபுரிகிறேன். 

மேடையேறிப் பேசத் தயக்கம் இருக்கிறது தான்... என்றாலும் எண்ணற்ற மேடை விவாதங்கள், கதைப் போட்டிகள், பாடல் போட்டிகள், நகைச்சுவைப் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். 
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதென்றாலே பீதி பரவும் என்னுள்ளே... ஆனாலும் அதற்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெற்று மோட்டார் சைக்கிள் ஓட்டினேன். 
உயர்மாடியிலிருந்து கீழே காண்பதில் இருக்கும் அச்சம் இருக்கிறதே... அது உச்சத்தை எட்டும்... என்ற போதிலும் நான் bungee jump, parasailing,  மலையேறுவது என்றெல்லாம் பல சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறேன். 

யார் தைரியசாலி? பயமே இல்லாத ஒருவர் தைரியசாலியா, அல்லது பயம் இருந்தும் அதை எதிர்கொண்டு முறியடிப்பவர் தைரியசாலியா? 

சிறுவயதிலிருந்தே பலவிதமான பயமுறுத்தல்களை உள்வாங்கிவிட்டதால் என்னிடம் அச்சம் தோன்றுவது எளிதாகிவிட்டது. ஆனால் கூடவே அந்த அச்சத்தில் இயல்பாகவே தைரியமும் உதிக்கிறது. 

"உனக்கு இந்தப் பயம் இருக்கிறதா... இதை ஒரு முறையாவது செய்து பார்.

பயம் மறையவில்லையென்றால் இனி அதைச் செய்யத் தேவையில்லை.

ஆனால் பயம் மறைந்துவிட்டால் உன்னிடம் ஒரு மன நிம்மதி தோன்றும்" 

என்று என் உள்மனத்தில் என்னிடம் நானே பேசுவதுண்டு. 

வாழ்க்கையில் நம்மை நோக்கி ஒரு சில மிரட்டல்கள் வந்து சேர்வது வழக்கம் தான்.

அதைக் கண்டு பயப்படுவது இயல்பு தான். இருப்பினும், மறுகணமே எழுந்து நின்று, துணிந்து சென்று அதைத் தைரியத்துடன் எதிர்கொள்வேன். 

நீங்கள் எப்படி? நீங்களும் தைரியசாலி தானே? 

மீண்டும் பேசுவோம்...

இப்படிக்கு, 
தர்ஷி

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்