Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா செய்தியில் மட்டும்

நீங்கள் கடைசியாக எதற்கு நன்றி சொன்னீர்கள்?

வாசிப்புநேரம் -

அண்மையில் தேசிய தினக் கொண்டாட்டம் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்க மரினா பே மிதக்கும் மேடைக்குச் சென்றிருந்தேன்.

அங்கு, பார்வையாளர்கள், எதற்கு நன்றிகூற விரும்புகிறார்கள் என்பதையும் அவர்கள் எடுத்துக்கொள்ள விரும்பும் உறுதிமொழியையும் எழுத ஊக்குவிக்கப்பட்டனர்.

குடும்பம், நண்பர்கள், புதிய வீடு, உணவு எனப் பல விதமான பதில்கள் வந்தன. 

அன்புக்குரியவர்களின் அரவணைப்பு, அளவில்லா அக்கறை, கண்டிப்போடு இருந்தாலும் எப்போதும் கிடைக்கும்  ஆதரவு... இப்படி விலைமதிப்பே இல்லாத பொக்கிஷங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நானும் எனக்கு முக்கியமானவற்றைப் பட்டியலிட ஆசைப்பட்டேன்!

குடும்பம், நண்பர்கள் என முதலில் எழுதினேன்.

அத்துடன் வேலையும் உணவும் பின்னர் சேர்ந்துகொண்டன.

அவற்றுடன் என் பட்டியல் முடியவில்லை.

எந்நேரமும் கிடைக்கும் குடிநீர், சாலைகளில் எத்தனை மணிக்கு நடந்தாலும் பாதுகாப்பாக உணர்வது, குடியிருக்க அமைதியான அழகான  வீடு, ஆரோக்கியமான உடல்நலம், உலகைக் கைக்குள் அடக்கும் இணையம் என எத்தனை எத்தனை அற்புதமான அம்சங்கள் உள்ளன!

எனக்கு முக்கியமாகத் தெரிபவை இன்னொருவருக்கு ஒரு பொருட்டாகத் தெரியாமல் போகலாம்.

ஆனால் சுவாசிக்கச் சுத்தமான காற்றுமுதல் சரியாக வேலை செய்யும் உடல் உறுப்புகள் வரை நமக்குக் கிடைக்கும் ஒவ்வொன்றுக்கும் நாம் நன்றி கூறவேண்டும்.

அவ்வப்போது எழும் சிறிய பிரச்சினைகளால் வாழ்க்கை மிகவும் கடினமானதுபோல் தெரியலாம். 

இக்கணம் நானே அதிகம் பாதிக்கப்பட்டவர்... என்ன தவறு செய்ததால் இப்படியெல்லாம் நடக்கிறது என்றெல்லாம்கூடத் தோன்றலாம்.

எத்தனையோ பேர் உலகில்... ஏன்! சிங்கப்பூரிலேயே நினைத்துப்பார்க்க முடியாத சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

அவர்களைப்போன்ற சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு வேலையின் காரணமாகக் கிடைத்திருக்கிறது.

அவர்களைப் பார்க்கும்போது நான் மலை எனக் கருதும் பிரச்சினைகள் எறும்பைவிடச் சிறியது எனப் புரியும்.

என் பாக்கியத்தை எண்ணி நன்றியோடு இருக்கக் கற்றுக்கொண்டேன்.

நாம் ஒன்றுக்கு நன்றியுணர்வு கொண்டிருக்கும்போது அது இன்னும் பன்மடங்கு நமக்குக் கிடைக்கும் என்பதைப் படித்திருக்கிறேன்.

அதனால் அன்றைய தினம் எவ்வளவு சிரமமாக இருந்தாலும் நான் ஏதாவது ஒன்றுக்கு மனத்தளவில் நன்றிகூற முயற்சி செய்வேன்.

சில சமயங்களில் சொன்னதையே சொல்வதுபோல் தோன்றும். ஆனால் ஒவ்வொரு முறையும் இதற்கு முன் நினைத்துப்பார்க்காத அம்சத்தை நினைவுகூர்வேன்.

அது மற்றோர் அம்சத்திற்கு இட்டுச்செல்லும். பின்னர் அது இன்னொன்றுக்கு வழிவிடும்.  

இறுதியில் முகம் மலரச் செய்யும் மனநிறைவு மட்டுமே நிலைத்திருக்கும்.

உங்களுக்கு எப்படி? 
நீங்கள் எதற்காக நன்றிசொல்ல விரும்புகிறீர்கள்?

அன்புடன், 

கீர்த்திகா பெருமாள்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa