பேசுவோமா exclusive
பேசுவோமா: வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தயாராதல்...
நலம்தானே நண்பர்களே?
கோவிட்-19 நோய்ப்பரவலால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், பெரும்பாலும் அகற்றப்பட்டுவிட்டன. சுமார் இரண்டரை ஆண்டுகளாக எங்கும் செல்லாமல் காத்திருந்த அனைவருமே, எங்காவது விடுமுறைக்குச் செல்ல ஆவலோடு காத்திருக்கிறோம்.
இதைப் படிக்கும் சிலர், ஜூன் பள்ளி விடுமுறைக்குச் சென்று திரும்பியிருக்கவும் கூடும். இந்த நேரத்தில், ஒரு விடுமுறைக்கோ பயணத்துக்கோ எப்படித் தயாராவது என்பதுபற்றிய என் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என விரும்புகிறேன். தெரிந்த அம்சங்கள்தான். இருந்தாலும் ஒரு சிறு நினைவூட்டல்...
கொரோனா கிருமிப்பரவலுக்கு முன் அடிக்கடி பயணம் மேற்கொள்பவன் என்னும் முறையில், நான் கடைப்பிடிக்கும் சில வழிமுறைகள் உங்களுக்கும் பயன் தரலாம். விடுமுறைக்கு எங்கே போகலாம் என்பதைத் தீர்மானிப்பதே முதல் பணி. குடும்பத்தோடு விடுமுறைக்குச் சென்றால், அந்த இடம் எல்லாருக்கும் பிடித்தமானதாக இருப்பது முதல் தேவை.
சிலருக்குக் கடற்கரை சார்ந்த விடுமுறைத் தலங்கள் பிடிக்கலாம். சிலருக்குப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் அனுபவம்தான் பயணமே! இளம் பிள்ளைகளுக்குக் கேளிக்கைப் பூங்காக்கள் நிறைந்த இடம் பிடிக்கலாம். பதின்மவயதுப் பிள்ளைகள் என்றால் பிரச்சினையே இல்லை. இணைய வசதியுடன் கூடிய ஒரு திறன்பேசியை மட்டும் கையில் கொடுத்துவிட்டால் போதும். விடுமுறையாவது பயணமாவது? அது வேறு கதை.
எல்லாருக்குமே பிடித்த இடம் என ஒன்று அமைவது சிரமம்தான். எனவே, யாராவது குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போகவேண்டித்தான் இருக்கும். ஒருவழியாக இடத்தைத் தேர்ந்தெடுத்தபின் பயண முகவர் மூலமாக விமானச் சீட்டும் ஹோட்டல் அறை முன்பதிவும் செய்வதா இல்லை சொந்தமாக இணையத்தில் பதிவு செய்வதா என்பது உங்கள் விருப்பம். இரண்டிலுமே வெவ்வேறு விதமான சாதக, பாதகங்கள் இருக்கின்றன.
சொந்தமாக இணையத்தில் விமானச் சீட்டு எடுக்குமுன் கண்டிப்பாக அதுபற்றித் தேடுவோம். ஆனால், அந்தத் தேடலை இணையம் நினைவில் வைத்துக்கொள்ளாதபடி தேடவேண்டும். ஒருமுறை குறிப்பிட்ட இடத்துக்கான பயணச் சீட்டைத் தேடினால் உங்கள் கணினியில் உள்ள உளவாளிகள் அதை மோப்பம் பிடித்து நினைவில் வைத்துக்கொண்டு மறுமுறை தேடும்போது கட்டணத்தை உயர்த்திவிடலாம். எனவே, மறைவாகத் தேடும் Incognito mode-டில் பயணச் சீட்டு, ஹோட்டல் பதிவைத் தேடவும்.
நாலு பேர் உள்ள குடும்பத்திற்குச் சேர்ந்து விமானச் சீட்டு முன்பதிவு செய்தால், சில வேளைகளில் ஆளுக்கு 50 வெள்ளிவரை கூடுதல் கட்டணம் வரலாம். சில வேளைகளில் அதே கட்டணம் குறையலாம். எனவே, இரண்டிரண்டு பேராகப் பதிவு செய்து தேடிப்பார்த்து இறுதி முடிவெடுங்கள். நண்பர்கள் நால்வர் சேர்ந்து போவதாக இருந்தால், விமானச் சீட்டைத் தனித் தனியாக எடுப்பது நல்லது. ஏதேனும் காரணத்தால் ஒருவர் வரமுடியாமற்போனால், மற்றவர்கள் பயணச் சீட்டில் பணம் கட்டித் திருத்தம் செய்யும் பிரச்சினை வராது.
எத்தனை நாள்களுக்குமுன் விமானப் பயணச் சீட்டு எடுத்தால், மிகக் குறைவான கட்டணத்தில் எடுக்கலாம் என்று இணையத்தில் தகவல்கள் கிடைக்கின்றன. 64 நாள்களுக்கு முன் எடுத்தால் மிக மலிவு என்கிறது ஒரு பயணத்தளம். பயணத் துறை நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் ஆலோசனை பெறலாம்.
கூடிய மட்டும், குறைவான பெட்டிகளோடு பயணம் செல்வது பல வகையிலும் வசதியாக இருக்கும். கண்டிப்பாகச் சரக்குப் பகுதியில் போடும் பெட்டிகளின் எடை அதிகமாகத்தான் இருக்கும் என்றால் முன்கூட்டியே கூடுதல் எடை எடுத்துச் செல்லத் தனியாக முன்பதிவு செய்துவிடுங்கள். பொதுவாக, அனைத்துலக விமானச் சேவைகளில் ஒருவருக்கு 30 கிலோதான் எடுத்துச் செல்ல அனுமதியுண்டு. அதற்குமேல் தேவைப்படுமெனில், முன்கூட்டியே பணம் கட்டிப் பதிவு செய்துவிடுங்கள்.
போகும்போது குறைவாகத்தான் இருக்கும். வரும்போதுதான் எங்களுடைய பெட்டி வீங்கிவிடும் என்றால், அதற்கு ஏற்றாற்போல் திரும்பிவரும்போது மட்டும் கூடுதல் எடைக்குப் பணம் செலுத்திவிடுங்கள். விமான நிலையத்தில் கடைசி நேரத்தில் கூடுதல் எடைக்குப் பணம் செலுத்துவது, உங்கள் பயண மகிழ்ச்சியையே குலைத்துவிடும். அந்தக் கட்டணத்துக்கு ஒரு ஆளே தனியாய் ஒருமுறை பயணம் போய்வந்துவிடலாம்.
அதற்குமுன், நமது கடப்பிதழ் செல்லுபடியாகும் நிலையில் இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்க்கவேண்டும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. ஆறு மாத காலத்துக்குக் குறைவாக இருந்தால் வெளிநாட்டுக்குப் போகமுடியாது. குடும்பத்திலுள்ள அனைவரின் கடப்பிதழையும் சோதித்துவிடவேண்டும். ஏனெனில், ஒவ்வொருவரின் கடப்பிதழ் காலாவதியாகும் தேதியும் வெவ்வேறாக இருக்கும். ஒருவரது கடப்பிதழில் பிரச்சினை இருந்தாலும் ஒட்டுமொத்தப் பயணத் திட்டமும் பாழாகிவிடும். செல்லும் நாட்டுக்கு விசா அனுமதி தேவையா அல்லது முன்கூட்டியே இங்குள்ள தூதரகத்தில் விசா அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டுமா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
கிருமிப்பரவல் இன்னமும் முடிவுக்குவரவில்லை என்பதால், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான நிபந்தனைகளைப் பின்பற்றுகின்றன. தடுப்பூசி மட்டும் போதுமா அல்லது கிருமித்தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் அத்தாட்சி வேண்டுமா? அந்தப் பரிசோதனை எத்தனை மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும்? போகும் இடத்தில் கட்டாயத் தனிமைப்படுத்தும் உத்தரவு உண்டா? இவை எல்லாமே மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்கப்படவேண்டியவை.
பயண நாள் நெருங்கும்போது கவனம் செலுத்தவேண்டியது, பெட்டிகளைத் தயார் செய்வதில். எந்த நாட்டுக்குப் போகிறோம், அங்கே என்ன விதமான தட்ப வெப்பம் நிலவும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற உடைகளை ஆயத்தப்படுத்தவேண்டும். பனிப் பிரதேசம் என்றால், அதற்கு ஏற்ற ஆடைகளை இங்கேயே வாங்கி எடுத்துச் செல்லலாம். குறிப்பிட்ட நாட்டில் வசிக்கும் நண்பர்களோ உறவினர்களோ இருந்தால் அவர்களிடம் ஆலோசனை கேட்பது அதிகப் பயனுள்ளதாக இருக்கும்.
போகும் நாட்டில் ஹோட்டலில் தங்காமல், உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டில் தங்கினால், இங்கிருந்து அவர்களுக்குப் பிடித்தமான பொருள்களை வாங்கிச் செல்லலாம். கையோடு எடுத்துச் செல்லும் பெட்டியில் கடப்பிதழோடு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரை, மருந்துகளும் வைத்துக்கொள்வது முக்கியம். ஓரிரு நாள்களுக்குத் தேவையான துணிமணிகளை வைத்துக்கொள்ளமுடிந்தால் இன்னும் உத்தமம். சரக்குப் பகுதியில் போட்ட பெட்டி, ஏதேனும் காரணத்தால் வரத் தாமதமானால் சமாளிக்க அந்த ஆடைகள் உதவும்.
செல்லும் நாட்டின் பண்பாட்டுக்கு ஏற்ற ஆடைகளை உடுத்தவேண்டியிருந்தால், அதை கவனத்தில் கொள்ளுங்கள். அதற்குப் பொருத்தமான ஆடைகளை எடுத்துச் செல்லுங்கள். குறிப்பிட்ட உணவுப் பொருள்களில் ஒவ்வாமை இருந்தால், புதிய உணவு வகைகளை உட்கொள்ளுமுன் ஒன்றுக்குப் பலமுறை கேட்டு விசாரித்தபின் உட்கொள்ளுங்கள். ஹோட்டலுக்குப் போய்ச் சேர்ந்ததும் கடப்பிதழ் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருள்களை, அங்குள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டிவிடுங்கள்.
செல்லும் நாட்டின் சிம் அட்டை வாங்கியதும் அந்த நாட்டுத் தொலைபேசி எண்ணை, குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்துங்கள். எல்லா இடங்களிலும் இணைய வசதி கிடைக்காமற்போகலாம். டெலகிராம், வாட்ஸ் அப் போன்ற செயலிகளைப் பயன்படுத்த முடியாதபோது அவசரத்திற்கு நம்மைத் தொடர்புகொள்ள அது முக்கியம். நீங்கள் தங்கியுள்ள ஹோட்டலின் தொடர்பு எண்களையும் முன்கூட்டியே நெருங்கிய குடும்பத்தாருக்குத் தெரிவித்துவிடுங்கள்.
கவர்ச்சித் தலங்களில் நினைவுப் பொருள் வாங்குமுன், ஒன்றுக்கு நாலுகடை ஏறி இறங்கி விசாரித்தபின் வாங்குங்கள். அந்த நாட்டுப் பணமதிப்பில் உள்ளதை சிங்கப்பூர் வெள்ளிக்கு மாற்றிப் பார்த்து அது அவ்வளவு பெறுமதி உள்ளதுதானா என்பதைக் கணக்குப் போட்டுப் பாருங்கள். திறன்பேசியிலுள்ள கணக்கியைப் (Calculator) பயன்படுத்தத் தயங்கவேண்டாம்.
பாலியில், என் நண்பர் ஒருவர் 30 வெள்ளி ஓவியத்துக்குத் தவறுதலாக 300 வெள்ளி கொடுத்துவிட்டார். ஹோட்டல் அறைக்குத் திரும்பிக் கணக்குப் பார்த்தபோதுதான் அதை நாங்கள் கண்டுபிடித்தோம். திரும்பிப் போய் வாங்கமுடியாத தொலைவு வந்துவிட்டிருந்தோம். பயணம் முடியும்வரை ஒரே புலம்பல்.
கையிலுள்ள எல்லாப் பணத்தையும் ஒருவரிடம் கொடுத்து வைக்காதீர்கள். ஆளுக்குக் கொஞ்சமாகப் பிரித்து வைத்துக்கொள்வது நல்லது. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் சில்லறைத் திருட்டு அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோன்ற இடங்களில், எப்படிப் பாதுகாப்பாகப் பயணம் செய்வது என்று அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டு அதன்படி செய்யுங்கள்.
பணப்பையில் தேவையில்லாத, பயன்படுத்தாத அட்டைகளை வைத்துக்கொள்ள வேண்டாம். கடன்பற்று அட்டை அல்லது வேறுவித வங்கி அட்டைகள் தொலைந்துபோனால், உடனடியாக அவற்றை முடக்குவதற்குரிய அவசரத் தொலைபேசி எண்களைத் தனியே குறித்து வைத்திருப்பதும் முக்கியம். அதிகப் பணம் வைக்கப்பட்டுள்ள பணப்பையை அனைவரும் பார்க்கும்வகையில் பிரித்துப் பணம் கொடுப்பது நல்ல பழக்கம் அல்ல. சிறு சிறு தொகையாகப் பிரிக்கப்பட்ட ஓரிரு பணப்பைகளை வைத்துக்கொள்ளலாம்.
நம்மிடம் பணம் அதிகம் இருப்பது தெரிந்தால், கடைக்காரர்கள் வேண்டுமென்றே பொருளின் விலையை உயர்த்துவதுண்டு. அதிகப் பொருள்களை வாங்கச் செல்லும்போது, வாய்ப்பிருந்தால் உள்ளூர்க்காரர் ஒருவரை அழைத்துச் செல்லலாம். செல்லும் விடுமுறை, ஊரைச் சுற்றிப் பார்க்கவா அல்லது பொருள்கள் வாங்கவா என்பதைப் பயணக் குழுவிலுள்ள அனைவரும் தெளிவாகத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் ரசனையோடு ஒத்துப்போகாதவர்களோடு ஒருபோதும் விடுமுறைக்குச் செல்லாதீர்கள். அது இருவருக்குமே நரகம்!
தனிப்பட்ட முறையில் எனக்குத் தொல்லியல் தலங்கள், அரும்பொருளகங்கள் ஆகியவற்றின்மீது மோகம் அதிகம். ஒருமுறை எங்கள் குழுவில் பொருள்கள் வாங்கும் ஆர்வமுள்ள ஒருவர் சேர்ந்துவிட்டார். செல்லுமிடமெல்லாம், பொருள்களை வாங்கிக் குவித்தார். அது அவர் விருப்பம். மறுப்பதற்கில்லை. ஆனால், மற்ற அனைவரின் நேரமும் அதில் வீணாகிப் போனது. பார்க்கவேண்டிய இடங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. அது எனக்கு ஒரு படிப்பினை.
இதுபோல் நிறையப் பேசலாம். இப்போதைக்கு இதுபோதும். முடிக்குமுன்னால், ஒரு முக்கிய வேண்டுகோள். நினைவோடு பயணக் காப்புறுதி எடுத்துவிட்டு விடுமுறைக்குச் செல்லுங்கள். அது தரும் நிம்மதி அலாதியானது.
இனிய பயணத்துக்கு வாழ்த்துகள்!...
(மூத்த செய்தியாளர், பொன். மகாலிங்கம்)