Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

பொறுமை

பொறுமை என்றால் நமக்கு வேண்டிய ஒன்றுக்காகக் காத்திருப்பது, என்ன நேர்ந்தாலும் அமைதி காப்பது, மௌனமாகச் சிரமங்களைச் சகித்துக்கொள்வது என்பதுதான் பெரும்பாலும் நாம் அறிந்து வைத்திருக்கும் பொருள். 

வாசிப்புநேரம் -

பொறுமை என்றால் நமக்கு வேண்டிய ஒன்றுக்காகக் காத்திருப்பது, என்ன நேர்ந்தாலும் அமைதி காப்பது, மௌனமாகச் சிரமங்களைச் சகித்துக்கொள்வது என்பதுதான் பெரும்பாலும் நாம் அறிந்து வைத்திருக்கும் பொருள். அதுதான் எனக்கும் இருந்த புரிதல், அண்மையில் ஒரு வாசகத்தைக் காணும் வரை…

அமெரிக்க எழுத்தாளர் ஜாய்ஸ் மேயர் பொறுமை என்பதை இப்படி விளக்கினார்: ‘Patience is simply not the ability to wait – it’s how we behave while we are waiting’.

வெறுமனே காத்திருப்பது பொறுமை அல்ல; காத்திருக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான்...

‘நானும் பொறுமைசாலிதான்’ என்று எனக்குள் இருந்து அவ்வப்போது எட்டிப்பார்த்துச் செல்லும் எண்ணத்தை இந்த வாசகம் தட்டி வைத்தது.

ஒவ்வொரு நாளும் எத்தனை எத்தனை இடங்களில் பொறுமை காக்க வேண்டியிருக்கிறது என்று சற்றே யோசித்துப்பார்த்தேன்…

பேருந்து வரக் காத்திருக்கும்போது… வாட்ஸ்ஏப்பில் குறுஞ்செய்தியைப் பார்த்த பிறகும் மற்றவர் பதில் அனுப்பாதபோது… வரிசைகளில் நிற்கும்போது… பொதுப் போக்குவரத்திலிருந்து வெளியேறும்போது… கூட்டமுள்ள நடைபாதைகளில் நடக்கும்போது என்று அடுக்கிக்கொண்டே போகலாம்…

இப்படிப்பட்ட தருணங்களில் எப்படி நடந்துகொள்கிறோம்… அல்லது நடந்துகொண்டோம் என்று நினைவுகளைக் கொஞ்சம் பின்னோக்கித் திருப்பியபோது ‘நானா இப்படி?’ என்ற கேள்விதான் எழுந்தது.

சில சமயங்களில் வெளிப்படையாக என் உணர்வுகளைக் காட்டாமல் இருந்தாலும் முணுமுணுப்பது, கண்களை உருட்டுவது, முகத்தைச் சுழிப்பது என்று சில சம்பவங்கள் கண் முன் வந்து என்னை மிரட்டிச் சென்றன.

ரயிலிலிருந்து ஒரு முறை வெளியேறிபோது கண் தெரியாத ஓர் ஆடவரும் அந்த நிலையத்தில் இறங்கினார். அவர் தமது கைத்தடியை மெல்ல மெல்லத் தரையில் தட்டியவாறு படிக்கட்டுகளை நோக்கி மெதுவாகச் சென்றார். அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த ‘ஒருவர்’ இடையிடையே ‘உச், உச்’ என்று சொல்லிக்கொண்டே வந்தார். திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் கண் தெரியாத ஆடவரை வேகமாக இடித்துவிட்டு ‘அவர்’ விறுவிறுவெனப் போய்விட்டார்.

எனக்குக் கடுங்கோபம் வந்தது. அப்படி என்ன அவசரம்? தலையா போகப்போகிறது என்று யோசித்துக்கொண்டே சுற்றியிருந்தவர்களுடன் கண் தெரியாதவருக்கு உதவச் சென்றேன்.. 

கண் தெரியாதவரை இடித்துவிட்டுச் சென்ற அந்த ‘ஒருவர்’ யாரோ அலுவலகத்திற்குச் சென்றுவருபவர் அல்லது அவசரமாக வீட்டிற்குச் செல்பவர் என்று ஒரு விநாடி நீங்கள் யோசித்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால்கூட மனம் சற்று ஆறியிருக்கும்.

ஆனால், கண் தெரியாதவரை இடித்துச் சென்றது ஓர் இளையர். உச்சநேரம் பள்ளிக்கு நேரமாகிவிட்டது அதனால் அவர் ஓடியிருக்கலாம் என்று சிலர் சொல்வது கேட்கிறது. அப்போது இரவு மணி 7. விளையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்புகிறார்.

எது எப்படியோ, அடுத்தவர்களுக்கு இன்னல் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வது எந்த விதத்தில் நியாயம்? கண் தெரியாதவருக்குக் கைகொடுத்த சிலர் ‘no patience ah…’, ‘what’s the big hurry’ என்று அந்த இளையரைச் சாடினர்.

அதை நினைக்கும்போது நானும் சில முறை இப்படி நடந்துகொண்டிருக்கிறேனே என்ற குற்றவுணர்வு என்னைக் கிள்ளிப்பார்த்தது. முதியவர்களைத் தாண்டிச் செல்லவேண்டும் என்று வேகமாக அவர்களை முந்திக்கொண்டு போன சம்பவங்கள் என் நினைவுக்கு வந்தன.

 ஏன் அப்போது என்னால் பொறுமை காக்க முடியவில்லை? ஏன் அந்த இடத்தில் நான் வித்தியாசமாக நடந்துகொண்டேன்? முதியவருக்குப் பின்னால் மெதுவாக நடந்துசென்றால் என்ன? என்று பல கேள்விகள் எழுந்தன.

வேகமாகச் சுழன்றுகொண்டிருக்கும் உலகச் சூழல்மீது சுலபமாகப் பழியைத் தூக்கிப்போட்டுவிட்டு அப்படியே இதைக் கடந்து போய்விடலாம். ஆனால், இறுதியில் எனக்குத்தான் இழப்பு. எப்படி என்று கேட்கிறீர்களா?

அவசர அவசரமாகச் செல்வதால் இல்லை இல்லை… பொறுமையாக இல்லாததால் அடுத்தவர்களின் தவறான மதிப்பீட்டுக்கு ஆளாவது… பிறருக்குத் துன்பம் விளைவிப்பது… என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நிதானிக்க முடியாததால் நாளடைவில் கவனம் சிதறுவது போன்ற பாதிப்புகள் வரவே செய்கின்றன.

அப்படித்தான் ஒரு நாள் வேகமாகச் செல்லவேண்டும் என்று தனி நபர் நடமாட்டச் சாதனத்தை ஓட்டிய ஒருவர், நடைபாதையில் எங்களை வெட்டிக்கொண்டு சென்றபோது எதிரில் இருக்கும் மின் விளக்குக் கம்பத்தில் மோதிக்கொண்டார். அது தேவையா?

வாழ்க்கையில் என்னைச் சுற்றி எத்தனையோ ரசிக்கத்தக்க நிகழ்வுகள் இருக்கின்றன. அதைப் பார்த்து ரசிக்க ஒரு வாய்ப்பைத் தருகிறது பொறுமை. எந்தவிதச் சலசலப்பும் இன்றி பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள்தான் நன்மதிப்பைச் சம்பாதிக்கின்றனர்; வாழ்க்கையில் பல சிகரங்களைத் தொடுகின்றனர்.

‘பதறாத காரியம் சிதறாது’ என்பது போல நிதானத்தை உருவாக்கிக்கொள்ளும்போது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வாழ்க்கையின் சிக்கல்களைக் களையவும் பல வழிகள் பிறக்கின்றன.

‘A man who is a master of Patience is the master of everything else’ என்கிறார் முன்னாள் அமெரிக்க அரசியல் தலைவர் ஜியோர்ஜ் சேவில். பொறுமையைக் கைவசமாக்குவோம்! வாழ்க்கையில் சாதிப்போம்!

பொறுமையுடன்

வில்சன் சைலஸ்




விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்