ஏதோ நினைவுகள்...பாகம் 2
McDonald’s! இந்தப் பெயரைக் கேட்டாலே பலருக்கு ஆனந்தம். சிறுவயதில் எனக்கும் அப்படிதான்.
படம்: Pixabay
McDonald’s! இந்தப் பெயரைக் கேட்டாலே பலருக்கு ஆனந்தம். சிறுவயதில் எனக்கும் அப்படிதான். சிங்கப்பூரில் முதன்முறையாக 1979ஆம் ஆண்டில்தான் அந்த உணவகம் திறக்கப்பட்டது.
அது ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள லியாட் டவர்ஸ் (Liat Towers) கட்டடத்தில் அமைந்திருந்தது. ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் வெளி உணவை உண்ணும் பழக்கம் என் குடும்பத்தில் இல்லை. அதனால், McDonald’sஇன் உணவை என்னால் உடனடியாகச் சுவைக்க முடியவில்லை. என் நண்பர்கள் மூலம் அவர்கள் உண்டு மகிழ்ந்த அனுபவங்களை மட்டுமே கேட்க முடிந்தது.
என் மூன்றாவது அக்கா பள்ளிப் படிப்பை முடித்ததும் மத்திய நகர்ப் பகுதியில் ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்க தொடங்கினார். அப்போதுதான் முதன் முதலில் McDonald’s உணவகத்திற்கு என்னை அவர் அழைத்துச் சென்றார். பர்கர் (Burger) எனும் உணவை நான் இதற்கு முன் பார்த்ததில்லை.
ஃபிரஞ்சு ஃபிரைஸும் (French Fries) புதிதே. உணவை உண்ட மகிழ்ச்சியில் ஆர்சர்ட் ரோட்டையும் ஒரு சுற்று வலம் வந்தேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் 1984ஆம் ஆண்டில்தான் நான் முதல் முறையாக ஆர்சர்ட் சாலைக்குச் சென்றேன். என் குடும்பத்தில் நாங்கள் கோயில் நிகழ்ச்சிகள், திருமணங்கள், உறவினர்-நண்பர் வீட்டு விருந்துகள் போன்றவற்றுக்குத்தான் அதிகமாக வெளியே செல்வது வழக்கம். அதனால், ஆர்சர்ட் ரோட்டிற்குச் செல்வதற்கு வாய்ப்பு கிட்டவில்லை.
தைப்பூசத் திருவிழாவில் உறவினர்கள் நண்பர்கள் அதிகமானோர் கலந்துகொண்டு காவடி எடுப்பார்கள். அதனால், எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அது ஓர் ஆன்மிக அனுபவமாக மட்டுமல்லாமல் ஒரு சுற்றுலாபோல் அமைந்தது. சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயிலிலிருந்து நடக்கத் தொடங்குவோம். டேங்க் ரோட்டின் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்திற்குச் செல்வோம். அதையடுத்து, அருகில் உள்ள ஃபோர்ட் கேனிங் ஹில்லுக்கு (Fort Canning Hill) இளைப்பாறுவதற்குப் படையெடுப்போம். அங்குள்ள பூங்காவில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், முன்பு அங்கிருந்த வேன் கிளீஃப் அக்குவேரியத்தில் (Van Cleef Aquarium) உள்ள அழகிய வண்ண மீன்களை ரசிக்காமல் நாங்கள் வீடு திரும்பியதில்லை. செந்தோசாவில் தற்போதுள்ள மீன் கண்காட்சியகத்துக்கு அது நிகரில்லை என்றாலும் அந்தக் காலத்தில் கடல் உயிரின ஆராய்ச்சி அங்குதான் தொடங்கியது.
அதைப் போன்ற சந்தர்ப்பத்தில்தான், கிளமென்சியூ அவென்யூ ரிவர் வேலி ரோட்டின் முனையில் அமைந்திருந்த National Theatre எனும் தேசிய அரங்கை வெளியிலிருந்து நான் பார்த்திருக்கிறேன். வெளிநாடுகளிலிருந்து வந்த பிரபலங்களின் பல மேடை நிகழ்ச்சிகள் அந்த அரங்கில் நடைபெற்றுள்ளன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நிகழ்ச்சியைக் காண சிங்கப்பூரின் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள் அங்கு திரண்டதாக என் உறவினர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன்.
அந்த இடங்களுக்கு அல்லது அவை இருந்த பகுதிகளுக்கு மீண்டும் செல்லும்போது என் பிள்ளைகளுடன் அவற்றைப் பற்றிய துணுக்குகளையும் என் நினைவுகளையும் பகிர்ந்துகொள்வது வழக்கம். வரலாற்றுச் சிறப்பிமிக்க தருணங்களையும் சின்னங்களையும் பற்றிய ஆர்வத்தை அவர்களுள் அது தூண்டும். அவற்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள அவர்கள் விழைவார்கள்.
பல வேளைகளில் அவர்கள் சொந்தமாகத் திரட்டிய தகவல்களைப் பற்றிக் குடும்பமாக நாங்கள் கலந்துரையாடுவதுண்டு.
பிள்ளைகளின் சிறுவயதில் அதிகமாக நாங்கள் சிங்கப்பூரைத்தான் சுற்றிப் பார்த்தோம். நம் நாட்டின் வரலாற்றையும் கலாசாரத்தையும் முதலில் அனுபவிக்கக் கற்ற பின்னர், வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள நானும் என் கணவரும் திட்டமிட்டோம். சிங்கப்பூரின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ள மலேசியாவுக்கும் பல பயணங்கள். பள்ளி விடுமுறைகளின்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாங்கள் மேற்கொண்ட பயணங்களில் பிள்ளைகள் மட்டுமல்ல, நாங்களும் புதிய விவரங்களைக் கண்டறிந்த தருணங்கள் பல. மவுண்ட் ஃபேபர் (Mount Faber) பகுதியில் கைவிடப்பட்ட நீர்த்தேக்கத்தை சிங்கப்பூர் மரபுடைமைக் கழகம் 2014இல் கண்டுபிடித்த தகவலை என் பிள்ளைகள் மூலமே நான் அறிந்துகொண்டேன். இப்படி நினைவுகள் தரும் பாடங்கள் பல...
அன்புடன்