Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா செய்தியில் மட்டும்

என் நாட்டை எனக்கு எந்த அளவுக்குப் பிடிக்கும்?

வாசிப்புநேரம் -

வணக்கம் நேயர்களே!

தேசிய தினம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படையுடன் உள்ள என் தொண்டூழியப் பயணத்தைப்பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

இங்கு ஆண் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் தேசியச் சேவையாற்றுவது கட்டாயம்.

பெண்களுக்கு அது கட்டாயமல்ல.

ஆனால் நானும் தேசிய சேவையாற்றவேண்டும் என்ற கனவு சிறு வயதில் என்னுள் மலரத் தொடங்கியது.

உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரிப் பருவத்தில் யோசித்ததுண்டு...

பேசாமல் சிங்கப்பூர் ஆயுதப்படையில் சேர்வதற்கு எழுதிக்கொடுத்துவிடலாமா என்று.

மற்ற வாழ்க்கைக் குறிக்கோள்களால் அந்த எண்ணம் எண்ணமாகவே போய்விட்டது.

பிறகு பல்கலைக்கழகப் பயணம் தொடங்கியது.

அதுவும் கண் சிமிட்டும் நேரத்தில் கடந்துவிட்டது. 

ஒருநாள் என் நண்பர் ஒருவர் மூலம் சிங்கப்பூர் ஆயுதப் படையில் தொண்டூழியர் பிரிவு இருப்பது எனக்குத் தெரியவந்தது.

அதைக் கேட்டதும் எனக்கு அளவில்லாத ஆனந்தம்!

உடனே அதைப்பற்றி இணையத்தில் மேல்விவரங்கள் திரட்டி அந்தப் பிரிவில் சேர விண்ணப்பித்தேன்.

நேர்முகத் தேர்வு, மருத்துவச் சோதனை ஆகியவற்றுக்குப் பிறகு என் கனவு நனவானது.

கடந்த ஆண்டு என் முழுநேர வேலைக்கு மத்தியில் நான் அடிப்படை ராணுவப் பயிற்சிக்குச் சென்றேன்.

என்னுடன் வெவ்வேறு வயதை, வாழ்க்கைச்சூழலைக் கொண்ட பெண்களும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கிளமெண்டியில் உள்ள மாஜு முகாமில் 2 வாரப் பயிற்சி நடைபெற்றது.

பயிற்சி அவ்வளவு கடினம்.

வழக்கமாக நடைபெறும் அடிப்படை ராணுவப் பயிற்சிதான் எங்களுக்கும் நடைபெற்றது.

அணிவகுப்பு... SAR-21 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்துவது... காட்டில் தங்குவது... தெக்கோங் தீவில் பயிற்சி மேற்கொள்வது...

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல சிரமங்களை எதிர்நோக்கினேன்.

பல தருணங்களில் "நான் ஏன் இதைச் செய்கிறேன்?" "இதெல்லாம் தெரிந்தும் ஏன் இதில் வேண்டுமென்றே கலந்துகொள்ள விண்ணப்பித்தேன்?" என்ற கேள்விகள் என் உள்ளத்தில் உதித்தன.

அவற்றுக்கெல்லாம் கிடைத்த ஒரே பதில்...

நானும் என் நாட்டிற்கு என் பங்கையாற்றவேண்டும்.

என் நாட்டின் மீது எனக்கு அவ்வளவு பற்று.

எங்களில் பலர் அந்தக் காரணத்திற்காகத்தான் இதில் தொண்டூழியராகச் சேர்ந்தனர்.

எனது இந்தத் தொண்டூழியப் பயணம் தொடர்கிறது... இனிமேலும் தொடரும்.

இப்போது நான் கடற்படையில் தொண்டாற்றுகிறேன்.

கப்பலிலிருந்தவாறு எதிரே எங்கிருந்து மற்ற கப்பல்கள் வருகின்றன என்று கண்காணிப்பது எனது பொறுப்பு. (Bridge Watchkeeper)

ஆண்டுதோறும் குறைந்தது 5 நாள் இவ்வாறு நான் சிங்கப்பூருக்காக அர்ப்பணிக்கிறேன்.

அனைவருக்கும் என் மனமார்ந்த தேசிய தின வாழ்த்துகள்!

மாஜுலா சிங்கப்பூரா!

அன்புடன்,
சுகந்தி

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்