பேசுவோமா செய்தியில் மட்டும்
யார் பெரியவர்?

(படம்: Pixabay)
சின்ன வயதில் நமக்கு இது பற்றிக் குழப்பமே இருப்பதில்லை.
அம்மா பெரியவர். அப்பா பெரியவர் என்று நினைப்போம்.
சில காலம் அண்ணன் பெரியவர் என்று நினைப்போம்.
ஆசிரியர் பெரியவர் என்று நினைத்ததும் உண்டு.
திடீர் என்று ஒரு நண்பர் பெரியவர் என்று நினைப்போம்.
பிறகு எல்லாருமே பெரியவர்கள் என்று நினைத்துவிடும் காலமும் வரும்.
அப்புறம் எப்படி எப்போது அந்த அதிசயம் நடந்தது என்றே தெரியாது!
‘நானே பெரியவன்!’ என்று நினைப்போம்.
அப்போது ஏதோ ஒன்று செத்துப் போகிறது!
மற்றவர்களைப் பெரியவர்கள் என்று நினைக்கும்வரை நம்மோடு இருந்த ‘அது’ சட்டென்று அகால மரணம் அடைகிறது!
நானே பெரியவன்!
இதில் எது சரி?
யாரோ பெரியவர் என்பது சரியா? நானே பெரியவன் என்பது சரியா?

பழைய கவிஞர் கணியன் பூங்குறனாரைப் பார்த்து!
சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்!
அவர் யார் பெரியவர் என்பதே தேவை இல்லை என்று சொல்லிவிட்டார்.
யாரையும் பெரியவர் என்று நினைத்து நீ வியந்துவிடவும் வேண்டாம். உன்னைப் பெரியவன் என்று நினைத்து யாரையும் நீ இகழ்ந்துவிடவும் வேண்டாம் என்று சொன்னார்.
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே!
என்று சொல்லிவிட்டு அவர் நடையைக் கட்டிவிட்டார்!
நாம் பெரியவனாக இருப்பது நல்லதா சின்னவனாக இருப்பது நல்லதா என்றும் நமக்கு ஒரு சந்தேகம் வரக்கூடும்!

இப்போது சமீபத்தில்! 800 வருடங்களுக்கு முன்பு! கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த பாரசீகக் கவிஞர் ரூமி, ‘பேசாமல் நீ சின்னவனாக இருந்துவிடு!’ என்கிறார்.
உயரமான பாறையாக
இருக்காதே
அங்கு ஒரு புல்லும் முளைப்பதில்லை!
கீழே கிட!
தரையில் சேறாக இருந்துவிடு
காட்டுப் பூக்கள் எல்லாம் உன்னைத் தேடி வந்து பூக்கும்!
பெரியவனா சின்னவனா என்னும் போராட்டத்தில் யாராக இருந்தாலும் அவருக்கும் ஒரு வாழ்க்கை உண்டு என்கிறார் இப்போதைக்கு அவசரத்துக்குப் பெயர் நினைவுக்கு வராத ஒரு ரஷ்யக் கவிஞர்!
கடல்
இருக்கிறதே
என்பதற்காக
ஓடை வற்றிவிட வேண்டுமா என்ன?
இதில் இன்னொரு சின்ன ஆச்சரியம் என்னவெனில்...
தாகம் என்று வரும் யாரும் கடலைத் தேடிப் போவதில்லை! ஓடையைத் தேடித்தான்
கையேந்தியபடி வருவார்கள் என்பதை நீங்களும்கூடக் கேள்விப்பட்டிருக்கக் கூடும்!
அன்புடன்
இந்திரஜித்
