Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா செய்தியில் மட்டும்

மீண்டும் பிறந்த கதை…

வாசிப்புநேரம் -

2021, ஜூலை 28. 

மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள பொது மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு. 

சுற்றிலும் செயற்கை சுவாசக் கருவியுடன் போராடிக் கொண்டிருந்த உயிர்கள். அவர்களில் ஒருவராக 3-ஆம் எண் கட்டிலில் என்னைக் கிடத்தினார்கள். 

“உங்கள் மனைவியின் உயிர்வாயு அளவு குறைந்துகொண்டே போகிறது. எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறோம்,” என மருத்துவர் என் கணவரிடம் தொலைபேசியில் சொன்ன வார்த்தைகள் உடைந்து போயிருந்த என் உடலையும் உள்ளத்தையும் இன்னும் நொறுக்கின. 

கண்களில் மரண பயம். கண்ணீர் கசிந்தது. இதுதான் என்னுடைய கடைசி நொடியா?... மனத்துக்குள் சிந்தனைக்கு எட்டாத பற்பல பயங்கர எண்ணங்கள். கோவிட் படுத்திய பாடு கொஞ்சமா, நஞ்சமா… உடல் களைத்தேன், கண் அயர்ந்தேன். 30 நிமிடங்கள் கழித்துத் திடுக்கிட்டு எழுந்தேன். 

“நீங்கள் கண் அயர்ந்த இந்த 30 நிமிடங்களில் உங்களுடைய உயிர்வாயுவின் அளவு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து மூச்சை நன்றாக இழுத்துவிடுங்கள். உங்களால் கண்டிப்பாகக் கோவிடில் இருந்து முழுமையாக மீண்டுவர முடியும்”, என் அருகே நின்று என்னைத் தேற்றிக் கொண்டிருந்தார்... அதே மருத்துவர். 

அந்த வார்த்தைகள் என் காதுக்குள் பாய்ந்த வேகத்தில், மனத்தில் பலமடங்கு தைரியம் தானாகத் தொற்றிக்கொண்டது. நாடி நரம்புகள் ‘உயிர்’ பெற்றன. 
அந்த ஜூலை 28ஆம் தேதிதான் நான் மீண்டும் பிறந்த நாள்.

அகக்கண்கள் என் வீட்டையும் என் கணவர், என் இரு குழந்தைகளையும் சுற்றிவந்தன. மனத்தின் வறட்சி நீங்கியது. சிந்தனை தெளிந்தது. 12 நாள்கள் போராடினேன்.  மரணத்தை வென்று, மருத்துவமனையில் இருந்து என் கால்கள் வீட்டை நோக்கி ஓடின. 

ஓராண்டாகி விட்டது. இருந்தாலும் ‘என் கதை’ சொல்லி ஓயாத நாளில்லை. மறுபிறவி கொடுத்த கடவுளுக்கும் உடல்-உள்ளம் தேற்றிய நல்லுள்ளங்களுக்கும் நன்றி சொல்லி மாளாது. 

அடுத்து என்ன? 

இன்னும் வெல்லவேண்டும்... கதைகள் பல சொல்லவேண்டும்...

உங்களுக்கும் இருக்கும் வெற்றிபெற்ற கதைகள்...

மீண்டும் பேசுவோம். 

செய்திக்காக, 
சவுரியம்மாள் ராயப்பன்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்