பேசுவோமா செய்தியில் மட்டும்
இப்போது உணர்கிறேன்...

நான் 12 வயதாக இருந்தபோது என் வகுப்பு நண்பர்கள் எல்லாரும் ice skating எனும் பனிச்சறுக்கு விளையாடச் சென்றார்கள், பெற்றோர் யாரும் உடன் செல்லாமல்.
உருண்டு புரண்டு கெஞ்சிக் கேட்டும் என் அம்மா விடவில்லை. அழுதேன்…. ஆர்ப்பாட்டம் செய்தேன். சில நாள்கள் பேசாமல் கூட இருந்தேன்.
சிறுது காலம் கழித்து என் அம்மாவே என்னை ice skating செய்ய அழைத்துச் சென்றார். பக்கத்திலேயே இருந்து பார்த்தார், கவனித்துக்கொண்டார்.
Ice skating செய்து முடித்ததும் விரைவு உணவு வாங்கிக்கொடுத்தார். அந்த நாளின் மகிழ்ச்சி இன்னும் நினைவில் இருக்கிறது.
நிறைய ஆண்டுகள் எடுத்துக்கொண்டேன்….. அன்று அவர் ஏன் என்னை விடவில்லை என்று புரிந்துகொள்ள.
Ice skating முதன்முதலில் செய்யும்போது விழுவதைத் தவிர்க்கமுடியாது. மற்ற விளையாட்டுகளைக் கற்றுக்கொள்வது போன்று தான்.
இப்போது என் மகன் பிறந்து 5 மாதங்கள் ஆகின்றன.… தவழ்கிறான்.
“பார்த்து பார்த்து! கவனம்! அங்கே செல்லாதே.. அம்மாவிடம் வா..” – இன்று நான் கூறுவது….
இன்னும் சில நாள்களில் நடக்கக் கற்றுக்கொள்வான்..
பின்னர் சைக்கிளோட்ட வேண்டும் என்பான். விழுவான்.. எழுவான்.. இன்னும் எவ்வளவோ இருக்கிறதே...
பிள்ளைகள் சுதந்திரமாக இருக்க நாம் கற்றுக்கொடுக்கவேண்டும். புதியனவற்றைச் செய்துபார்க்க விடவேண்டும். ஆனால் பாதுகாப்பாக.
ஒரு தாயான பிறகு நானும் பலவற்றை உணர்கிறேன்.
அப்போதே இதையெல்லாம் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாமோ என்று தோன்றும்.. அந்த மனப் பக்குவத்தில் நான் இல்லை. இப்போது என்னுடன் அவரும் இல்லை.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி..
என் அம்மா கூறியதெல்லாம் சரியே என்று உணரும்போது நான் கூறுவதெல்லாம் தவறு என்று மன்றாட குட்டி இதழ்கள் வந்துவிட்டன..
அன்புடன்,
சஹீரா