Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா செய்தியில் மட்டும்

ஒன்றில் ஒன்று!

வாசிப்புநேரம் -
(மூத்த செய்தியாளர் ஸதக்கத்துல்லாஹ்)
அவர் என் நண்பர். நல்ல இரசனையாளர். இசைப் பிரியர். திரையிசை அவருக்குப் பேரின்பம். தமிழும் மெல்லிசையும் இணையும் கணத்தின் அற்புதங்களை அவர் முகத்தில் தரிசிக்கலாம். 
 
நான் போகிற போக்கில் பாடல் கேட்பவன். அவர் அணு அணுவாய் இலயித்துக் கரைவார். அவர் பாடுவதையும், ரசிப்பதையும் பார்த்துக் கொண்டிருப்பதே சுகானுபவம். 
 
"ஹே ராம்" படத்தில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது என்றேன்.  
 
"இசையில் தொடங்குதம்மா...?" மெல்லிய தொனியில்... விழிமூடி குரல் மொழிந்தார். அவருடைய விரல்களில் ஆரோகணமும், அவரோகணமும் வழிந்தோடின. காற்றில் அலைந்த அவர் கைகளில் தேர்ந்த நாட்டியத்தின் நர்த்தனம்.
 
சட்டெனச் சிறகு விரித்து ...வான் வெளியில் பறந்து சஞ்சரிக்கும் ஒரு பறவையின் காட்சி என் கண்ணில் விரிந்தது. அவர் பாடிய அந்தக் கணம் இன்னும் என் நெஞ்சில் சித்திரமாய்... பத்திரமாய்....
 
பாடி முடித்ததும் விழி திறந்தார்.
 
நான் மலர்ந்தேன். அவர் நெகிழ்ந்தார்.  
 
ஒரு பாடலை ரசிப்பதற்கு இசையறிவு கூடுதல் பலம். கவனம் பிசகாமல் இருந்தால்....காலமெல்லாம் "இசை அமுதம்" என்பார் நண்பர். 
 
"காதுகளைத் தீட்டி வைத்துத் தியானம் போல் பாடல் கேட்டால்....அதுவரை கேட்காத எல்லாம் கேட்கும்" என்பார். உடன் இருப்பவரின் ரசனையையும் உயர்த்த வேண்டும் என்பதில் அவருக்குள்ள அக்கறை அது.
 
தொடர்ந்தார்....."ஹே ராம்" படத்துக்கு முதலில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் எல். சுப்ரமணியம். வயலின் இசைக்கலைஞர். தேர்ந்த இசைஞான வித்தகர். ஆனால், திரையிசையில் அவருக்கு அவ்வளவு தேர்ச்சியில்லை. அதில் ஒன்றும் தவறில்லை. 
 
அதுவரை பதிவுசெய்த படத்தைப் போட்டுப் பார்த்தார் கமல்ஹாசன். முன்னோட்டத்தில் மனம் ஒட்டவில்லை. இளையராஜாவிடம் போய்ச் சேர்ந்தார் கமல்.
 
ராசாவுக்கும்...ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம்; சங்கடம். எல்லாம் களைந்து கடந்த பிறகு இசையமைக்க ஒப்புக்கொண்டார். 
 
ஆனால் ஒரு சிக்கல். படத்துக்கான எல்லாப் பாடல்களும் எழுதி, இசையமைத்து, படப்பதிவும் முடிந்துவிட்டது. மீண்டும் புதிதாக இசையமைத்தால் கூடுதல் செலவு. 
 
எடுத்தவற்றைக் கொண்டு வரச் சொன்னார் ராஜா. காட்சிகளை ஓடவிட்டுப் பார்த்தார். அவர் மனத்துக்குள் என்னென்னவோ ஓடின. "புதிதாகப் படமாக்க வேண்டாம். நானே புதிதாக இசையமைக்கிறேன்" என்றார். அப்படிக் கிடைத்தவைதான் "ஹே ராம்" படத்தின் எல்லாப் பாடல்களும். 
 
தமிழின் தலைசிறந்த பாடல்களின் பட்டியலில்..."ஹே ராம்" பாடல்களும் நிச்சயம் இடம்பிடிக்கும். அதிலும் "இசையில் தொடங்குதம்மா...." நினைக்கும் கணந்தோறும் நெஞ்சினிக்க வைக்கும். 
 
ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அதில் இலயித்து போவதுதான் உன்னதம். கவிஞர் வாலியின் வார்த்தையில் சொல்வதென்றால்..."இஷ்டப்பட்டு கஷ்டப்படணும்"
 
தாமும் செயலும் தனித்தனி என்ற நிலையைக் கடந்து ஒன்றினால்...தனித்துவம் நிலைக்கும். அதற்கு ஒரு சாட்சி அந்த இசை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்