தேவையா? ஆசையா?

(படம்: Pixabay)
விலைவாசி கூடிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் எதை வாங்கினாலும் பலமுறை யோசிக்க வேண்டியிருக்கிறது.
இது நமக்குத் தேவைதானா?
இது எத்தனை நாள் தாங்கும்?
இதற்குப் பதிலாக வேறு பொருள்களைக் கொண்டு சமாளித்துக்கொள்ளலாமா?
எனப் பல எண்ணங்கள்.
எனக்கும் அப்படித்தான்.
ஓராண்டுக்குமுன் நான் புதுவீடு வாங்கி பல கனவுகளுடன் அடியெடுத்து வைத்தேன்.
வீட்டை வாங்குவதற்கு, வீட்டுச் சாவி கிடைப்பதற்கு முன்னர் அப்பப்பா...
ஒவ்வொரு நிமிடமும் கனவுதான்.
வீடு இப்படித்தான் இருக்கவேண்டும், இந்த மாதிரிதான் அலங்கரிக்கவேண்டும், இந்த அறைகலன்களை, பொருள்களைத்தான் வாங்கவேண்டும் என எண்ணிலடங்கா ஆசைகள்.
எல்லாமே முக்கியமான, தேவையான பொருள்கள் எனத் தோன்றியது.
பல கடைகளுக்குச் சென்று பொருள்களைப் பார்த்து ரசித்தேன்.
இணையத்தில் பல தளங்களுக்குச் சென்று ஆய்வு செய்தேன்.

பிறகு வீட்டுச் சாவி கையில் வந்தது.
வீட்டுக்குள் நுழைந்ததும் கண்ட கனவுகள் எல்லாம் கண்முன் வந்தன.
தேவையான பொருள்களைப் பட்டியலிடத் தொடங்கினேன்.
பட்டியலோ இங்கிருந்து ஐரோப்பாவரை சென்றது.
அங்கிருந்தும்கூட வீட்டுக்குப் பொருள்கள் நிச்சயம் தேவை, அத்தியாவசியம் என்று அப்போது நினைத்துக்கொண்டேன்.
பட்டியல் போட்டதும் மீண்டும் கனவுலகிற்கே சென்றுவிட்டேன்.
அப்போது ஒரு குரல் என்னைத் தட்டி எழுப்பியது.
எனது மனசாட்சி.
"நீ போட்டிருக்கும் பட்டியலில் இருக்கும் பொருள்களை எல்லாம் வாங்கினால், வீட்டில் நீ இருக்கக்கூட இடமிருக்காது" என்றது.
விழித்துக்கொண்டேன்.
பட்டியலை மீண்டும் அலசினேன்.
எது தேவைக்காக வாங்கவேண்டிய பொருள்? எது ஆசைக்காக வாங்க விரும்பும் பொருள்?
இரு பிரிவுகளாகப் பிரித்தேன்.

தேவை என்று முன்பு நினைத்த பொருள்களில் பாதிக்கும் மேல் ஆசைக்காக வாங்க விரும்பிய பட்டியலுக்குச் சென்றுவிட்டன என்பது அப்போதுதான் எனக்கே தோன்றியது.
பட்டியலில் இருக்கும் பொருள்களை மீண்டும் குறைக்க முற்பட்டேன்.
குறைத்தேன். வெற்றி!
கிடைத்தது மனநிறைவு.
திட்டமிட்டுச் செலவு செய்தேன்.
உண்மையிலேயே தேவையான பொருள்களை வாங்கினேன்.
ஆசைக்காக ஓரிரு பொருள்களையும் வாங்கிக்கொண்டேன். நெடுநாள் ஆசையல்லவா?
எனக்கு ஏற்பட்ட அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
ஆசை இருக்கலாம். இது பேராசையா?
விரலுக்கு ஏற்ற வீக்கமா?
இப்படிக் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறது.
உங்களுக்கு எப்படி?
தொடர்ந்து பேசுவோம்...
மோகனா