பேசுவோமா செய்தியில் மட்டும்
சமையல் ஒரு கலை....ஆனால் பெண்களுக்கு மட்டும் நிபந்தனையா?

(படம்: Pixabay)
சமையல் என்பது ஒரு கலை… வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்றும்கூட.
ஆனால் பெண்களுக்கு மட்டும் ஏன் அது ஒரு நிபந்தனையாக உள்ளது?
அந்தக் காலத்தில் நிலைமை வேறு. பெரும்பாலான பெண்கள் இல்லத்தரசிகளாக இருந்தனர். சமையலும், பிள்ளை வளர்ப்பும் அவர்கள் பொறுப்பு. நிதி சார்ந்தவை ஆணின் பொறுப்பு என்ற பிரித்துப் பார்க்கப்பட்டது.
காலப்போக்கில் பெண்கள் பெரியளவில் படிக்கத் தொடங்கினர், வேலைக்குச் செல்லத் தொடங்கினர், நிதிரீதியாகக் குடும்பச் சுமையைப் பங்கு போட்டுக்கொண்டனர்.
அப்படியானால் ஆண்களும் சமையலுக்கும், பிள்ளை வளர்ப்புக்கும் பொறுப்பேற்றுக்கொண்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அதற்கு இன்னமும் காலம் கனியவில்லை.
‘என்ன படித்தாலும், எவ்வளவு சாதித்தாலும் சமையலறைக்கு நீதான் பொறுப்பு…’
இதைக் கேட்டுக் கேட்டு வளர்ந்த பெண்கள் எத்தனை பேர்?
இன்று வரை பெரும்பாலான வீடுகளில் சமையல் வேலை பெண்களுடையது.
ஆனால் பெரும்பாலான உணவகங்களில் சமைப்பவர்களோ ஆண்கள்...

ஊதியம் இருந்தால் தான் சமையலுக்கு மரியாதையா?
பெண்கள் செய்யும் ஊதியமற்ற வேலைக்கும் மரியாதை வேண்டுமல்லவா?
அவர்கள் பிடித்துச் செய்பவர்கள்...
இவர்கள் பிடிக்கப் பழகிக்கொண்டவர்கள்...
பெண் பிள்ளைகளிடம் சமையல் பொறுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் எத்தனை பெற்றோர் அதை ஆண் பிள்ளைகளுக்கும் உணர்த்துகிறார்கள்?
கவலை எதற்கு... இன்னொரு பெண் வந்து பார்த்துக்கொள்வாள் என்று நினைக்கிறார்களோ?
அல்லது சமையல் என்பது பெண்களுக்கு மட்டுமே உரியது என்ற அறியாமையா?
என்னிடம் வெறும் கேள்விகள் மட்டுமே உள்ளன…
பதில்களைத் தேடுங்கள்… உங்கள் சமையலறையில்…
மீண்டும் பேசுவோம்,
அய்னுன்நிசா