Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா செய்தியில் மட்டும்

படித்த துறையா? பிடித்த துறையா? உங்கள் விருப்பம், உங்கள் முடிவு

வாசிப்புநேரம் -

'வளர்ந்த பின் நீ என்னவாக ஆசைப்படுகிறாய்?' 

சிறு வயது முதல் இந்தக் கேள்வியை நாம் பல முறை கேட்டிருப்போம்.

சிலருக்குக் குறிப்பிட்ட ஆசைகள் இருக்கலாம்...

சிலருக்கு எந்தவொரு துறை மீதும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம்....

(படம்: Ili Nadhirah Mansor/TODAY

சிலருக்கு ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும். ...

நானும் அப்படித்தான்!

'செய்தி' நிருபர் ஆர்த்தி சிவராஜன்

சிறு வயதில் என் உறவினர்கள் பலர் என்னிடமும் என் அக்காவிடமும் இந்தக் கேள்வியைக் கேட்பார்கள்.

மருத்துவர் ஆக வேண்டும் என்பது என் அக்காவின் ஆசை. அதை அவர் நிறைவேற்றியும் விட்டார். 

எனக்கோ ஒவ்வொரு வயதிலும் ஒவ்வோர் ஆசை. 

திரைப்படங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட வயதில் ஒளிப்பதிவாளர்  ஆக வேண்டும் என்ற ஆசை...

பள்ளிப் பருவத்தில் பேட்மின்ட்டன் விளையாட்டில் சிறந்து விளங்கியதால், பேட்மின்ட்டன் வீராங்கனையாக வேண்டும் என்ற ஆசை....

Pixabay

இப்படிப் பற்பல ஆசைகள்!

ஆனால் பள்ளிப் படிப்பு நிறைவுக்கு வந்தபோது ஒன்றுமே தோன்றவில்லை...

வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்ற பெரிய கேள்வி என் மனத்தில் தோன்றியது. 

அவ்வளவு இளம் வயதில் இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது எவ்வளவு கடினம்!  

ஒருபக்கம் குடும்பத்தாரின் எதிர்பார்ப்புகள்....

மறுபக்கம் என் தொடர் குழப்பம்....எனக்கு என்ன வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை. 

தனியாக எப்படி முடிவெடுப்பது? 

(படம்: Today)

அந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு யோசனை வழங்கினார் என் அக்கா. 

சிறு வயதிலிருந்தே மொழிகள் மீது எனக்கு அதிக ஆர்வம். 

தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சிறந்து விளங்கினேன்.

மின்னல் வேகத்தில் புத்தகங்களைப் படித்து முடிப்பேன்.

குற்றம் தொடர்பான கதைகள் என்றால் கொள்ளைப் பிரியம்.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு நான் ஏன் சட்டக்கல்வி  பயிலக்கூடாது என்ற எண்ணத்தை முன்வைத்தார் என் அக்கா. 

(படம்: TODAY)

வேறு எதிலும் பெரியளவில் நாட்டம் இல்லாத காரணத்தால் சட்டப்படிப்பை மேற்கொண்டேன்.

ஐந்தாண்டுகள் பட்டக்கல்வி....ஓராண்டு மேல்நிலை பட்டக்கல்வி....

வழக்கறிஞர் ஆனேன். 

சிங்கப்பூரில் பணிபுரிவதற்கான வழிகளை ஆராய்ந்தேன். எதிர்பாராமல் வந்தது.... கோவிட்-19 கிருமிப்பரவல்.

வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல். 
 
அப்போதுதான் என் வாழ்க்கை முடிவுகளைப் பற்றி என்னால் சிந்திக்க முடிந்தது. 

(படம்: Bethany Legg/Unsplash)

வழக்கறிஞராக வேண்டும் என்ற பாதையில் நான் என்னையே இழந்ததை உணர்ந்தேன். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பற்பல கடினமான தருணங்கள்....

இதையே வாழ்க்கை முழுவதும் செய்தால் என்ன ஆகும்? இந்த வேலையைப் பிடித்துத்தான் செய்கிறேனா? 

இப்படி நிறைய சந்தேகங்கள் எழுந்தன...

தற்காலிகமாக ஓய்வெடுத்து, 'உண்மையிலேயே உனக்கு எதில் நாட்டம் இருக்கிறது' என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். 

அப்போது கிடைத்த பதில்தான் ஊடகத்துறை.

(கோப்புப் படம்: Reuters/Andrew Kelly)

சட்டக்கல்வி பயின்றபோது அதில் உள்ள பாடங்களைவிட ஒவ்வொரு வழக்கிலும் பாதிக்கப்பட்டோரின் கதைகள்தான் என்னை அதிகம் ஈர்த்தன. 

பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணமும் தோன்றத் தொடங்கியது. 

அதை உலகிற்குச் சொல்லவும் விரும்பினேன்.

அதற்கு ஊடகத்துறை பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தேன். 

ஓராண்டாக 'செய்தி'யில் நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.

துறை மாறியபோது பலர் என்னிடம் கேட்ட கேள்வி - 'இவ்வளவு ஆண்டுகள் சட்டம் படித்தபின் எப்படித் துறை மாற மனம் வந்தது?'

அதற்கு நான் கேட்பது - 'ஏன் மாறக்கூடாது?'

வாழ்க்கையில் படித்ததைவிட பிடித்ததைச் செய்ய ஏன் இவ்வளவு யோசிக்க வேண்டும்?

சிலர் பிடித்ததையே படிப்பதால் அந்தத் துறையிலேயே பணிபுரிகிறார்கள்.

ஆனால் அனைவருக்கும் அந்த பாக்கியம் அமையாது அல்லவா?

அப்போது நாம்தான் அந்த வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

அப்படி நான் உருவாக்கிக்கொண்டதுதான் என் வேலை.

இன்று, எனக்கு பிடித்த துறையில் முனைப்புடன் பணிபுரிகிறேன்.

அதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி, மன நிறைவு.

நீங்கள் படித்த வேலையில் இருக்கிறீர்களா? பிடித்த வேலையில் இருக்கிறீர்களா?

பேசுவோம். 

செய்திக்காக,

ஆர்த்தி சிவராஜன்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa