Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா செய்தியில் மட்டும்

வளர்ந்த கலை மறந்ததேன்!

வாசிப்புநேரம் -

1960கள். 
1970கள். 

சிங்கப்பூர். 

உங்களையெல்லாம் நான் கொஞ்சநேரம் கடந்த காலத்திற்குக் கொண்டுசெல்லவிருக்கிறேன். 

எனக்கு 10 வயது இருந்தபோது கம்பத்து வீட்டிலிருந்து அடுக்குமாடி வீட்டுக்குக் குடியேறினோம். 

கம்பத்து வீட்டில் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தோம். 

காய்கறித் தோட்டங்கள். கோழி, பன்றிப்பண்ணைகள்.  

ஆடு மாடுகளும் வளர்க்கப்பட்டன. 

அவற்றின் கழிவு தோட்டங்களுக்கு உரமானது. 

அந்த உரத்தில் வளர்ந்த காய்கறி எங்களுக்கு உணவானது. 

பொருள்களை வீணாக்கி நான் பார்த்ததில்லை.  

அடுக்கு வீட்டுக்குக் குடியேறியபோதும் பொருள்களை வீணாக்குவதில்லை. வீசியெறிவதில்லை. 

'பன்றித்தோம்பு' என்று ஒன்று இருக்கும். ஒரு நடுத்தர வாளியின் அளவு. 

காய்கறிகளின் தோல், விதைகள்.... சாப்பிட்டதும்  தூக்கிப்போடும் மீன்முள், எலும்பு... இவற்றை அந்தத் தோம்பில் போட்டு, வீட்டு வாசலில் வைத்துவிடுவோம். 

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் இதைச் செய்வார்கள். இரண்டு நாளுக்கு ஒருமுறை ஒருவர் வருவார். 

வாசலில் வைக்கப்பட்டிருக்கும் தோம்பில் இருப்பதை அவர் தன்னுடைய கலத்தில் சேகரித்துச் செல்வார். 

மாதம் முடியும்போது எங்களுக்குப் 10 அல்லது 20 முட்டைகளை அவர் கொடுப்பார். 

குப்பையாகக் கொட்டிவிடாமல், சேகரித்து நாங்கள் கொடுக்கும் உணவுக்கழிவு பண்ணை விலங்குகளுக்குத் தீனியாகிறது. 

என் தந்தை சந்தைக்குச் செல்லும்போது வெறுங்கையுடன் போகமாட்டார். ஒரு பெரிய 'வக்குள்' எடுத்துச்செல்வார். வக்குள் என்பது பிடியுடன்கூடிய கூடை.

அதனுள் காய்கறிகள் உதிரியாகத்தான் இருக்கும். பிளாஸ்டிக் பைகள் கிடையாது. 

மாமிச வகைகளைக் கடைக்காரர்கள் செய்தித்தாளில் சுருட்டித் தருவார்கள். 

கம்பத்து வாழ்க்கை மெல்ல நகர்ப்புற வாழ்க்கைக்கு மாறத் தொடங்கியதும் பழக்கவழக்கங்களும் மாறின. 

வீணடிப்பதும் வீசியெறிவதும்  சர்வசாதாரணமாகிவிட்டன. 

வீசப்படும் பொருள் என்ன ஆகிறது.. அது நம் அற்புத உலகையும் அதில் வாழும் உயிர்களையும் எப்படிப் பாதிக்கிறது...

விளைவுகளை நாம் இப்போது மிக நன்றாகவே உணர்கிறோம். 

வருங்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.  

பருவநிலை மாறிவிட்டது. மேலும் மாறவிருக்கிறது. 

உலக நாடுகள் ஒன்றுகூடிக் கூட்டம் நடத்துகின்றன. 

தலைவர்கள் பேசுகின்றனர். திட்டங்கள் தீட்டுகின்றனர்.

இந்நேரத்தில் வீணடிக்காமல், வீசியெறியாமல் வளர்ந்த கலையை நான் நினைத்துப் பார்க்கிறேன். 

நகரமயப் பழக்கவழக்கத்தால் உணவுக்கழிவு..
துணிக்கழிவு... இவற்றோடு, 
பிளாஸ்டிக் கழிவும் பொருள் கழிவும் சேர்ந்துகொண்டுள்ளன. 

பொருள் கழிவு எனும்போது போத்தல்கள், முகக்கவசங்கள், மரச்சாமான்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். 

இவற்றோடு இன்னொன்றும் இப்போது சேர்ந்துகொண்டுவிட்டது. 

மின்கழிவு!

இந்தக் கழிவுகளைக் குறைக்கமுடியுமா என்று சிந்திக்கும் வேளையில் இவற்றை எப்படி வளமாக மாற்றலாம் என்றும் தற்போது ஆழமாக ஆராயப்படுகிறது. 

மறுபயனீடும் மறுசுழற்சியும் பரவலாகப் பேசப்படுகிறது.  

வளர்ந்த கலையை மறந்துவிட்ட என்னைப் போன்றவர்கள் என்ன செய்யலாம்...

நினைத்துப் பார்க்கலாம். எடுத்துச் சொல்லலாம். முன்மாதிரியாக இருந்து வழிகாட்டலாம்!   

அன்புடன்
பவளகாந்தம் அழகர்சாமி

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்