பேசுவோமா செய்தியில் மட்டும்
எழுத மறந்ததேன்?

என்ன எழுதுவது.. எதைப்பற்றி எழுதுவது... யோசித்தேன்.
எழுதுவது... இதைப்பற்றி எழுதினால்?
உங்களில் எத்தனைப் பேர் தினமும் கொஞ்சமாவது எழுதுகிறீர்கள்? வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன்... நான் அதிகம் எழுதுவதே இல்லை.

பேனா பிடித்த விரல்கள் அதை விரட்டிவிட்டு எழுத்துகளைத் தட்டிக்கொண்டிருக்கின்றன.
நான் சின்னப் பிள்ளையாக இருந்தபோது என் கையெழுத்தைப் பார்த்து 'எவ்வளவு அழகாக எழுதுகிறாய்' என்று பெருமைப்பட்டார்கள்.
இப்போது நான் எழுதினால் 'அட, எழுதுகிறாயே' என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

ஒருகாலத்தில் அம்மா, அப்பா நம் கையைப் பிடித்து எழுதப் பழக்கினார்கள்.
இப்போது பிள்ளைகள் பெரும்பாலும் தட்டித்தட்டியே கற்றுக்கொள்கிறார்கள்.

நல்லவேளையாக தொடக்க, உயர்நிலை வகுப்புகளில் எழுதச்சொல்கிறார்கள்.
இல்லையென்றால் நிலைமை என்ன?

முன்பு எழுத்துக்குக் கையால் உருக்கொடுத்தோம். இப்போது... எழுத்தைக் கண் பார்க்கிறது, கை தட்டுகிறது.
'காதலித்துப் பார்... கையெழுத்து அழகாகும்' என்று சொன்ன அதே வைரமுத்து தனது கவிதையைத் திருத்தி எழுதவேண்டியிருக்குமோ?
'காதலித்துப் பார்... உன்னால் எழுத முடியும்.'
இன்னமும் சில இடங்களில் நம் கையெழுத்துதான் செல்லுபடியாகிறது.
சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. ஒருமுறை என் கையெழுத்தைப் போட்டுப்போட்டுப பார்த்துத் தோற்றுப்போய்த் திரும்பிவிட்டேன்.

வீட்டில் கையெழுத்தைப் போட்டுப் பழகியபிறகுதான் திரும்பச் சென்றேன்.
பிறகுதான் தோன்றியது. ஏதாவது செய்யவேண்டும்.
இப்போதெல்லாம் தினமும் கொஞ்சமாவது எழுதிப் பழகுகிறேன்.
அழகாக இருந்த என் எழுத்துகள் அழியாமலும் இருக்கவேண்டும்.
பேனாவை என் கண் முன்னாலேயே எப்போதும் வைத்திருக்கிறேன்.
கொஞ்ச நேரம் கிடைத்தாலும் எதையாவது எழுதுகிறேன்.
ஆம்... எழுதுகிறேன்!
சந்திப்போம்,
சித்ரா