பள்ளி வட்டாரங்களில் சாலை விபத்துகள் அதிகரிப்பு
பள்ளி வட்டாரங்களில் தவறான வகையில் நடந்துகொள்ளும் வாகனமோட்டிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்தாலும், முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சென்ற ஆண்டு விபத்துகளில் எண்ணிக்கை கூடியதாகப் போக்குவரத்துப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோப்புப் படம்: TODAY.
சிங்கப்பூர்: பள்ளி வட்டாரங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் சென்ற ஆண்டு அதிகரித்துள்ளது. அந்த வட்டாரங்களில் தவறான வகையில் நடந்துகொள்ளும் வாகனமோட்டிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்துள்ளன.
இருந்தபோதிலும், முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சென்ற ஆண்டு விபத்துகளில் எண்ணிக்கை கூடியதாகப் போக்குவரத்துப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டு, பள்ளிகள் அமைந்துள்ள வட்டாரங்களில் 29 விபத்துகள் நேர்ந்ததாய் அவர்களுடைய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அவற்றில் இருவர் மாண்டனர். 2012, 2013-ஆம் ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டிலும் 19 விபத்துகள் நேர்ந்தன. சென்ற ஆண்டு அந்த எண்ணிக்கை 53 விழுக்காடு கூடியதாய் டுடே(TODAY) நாளேடு தகவல் வெளியிட்டது.
அதே நேரம், பள்ளிப் பகுதிகளில் சாலைப் போக்குவரத்துக் குற்றங்களுக்காக மொத்தம் 187 வாகனமோட்டிகள் பிடிபட்டனர். சிவப்பு விளக்கில் நிற்காமல் சென்றதே, அவற்றுள் ஆகப் பெரிய குற்றமாய் இருந்தது. அதற்காக 137 வாகனமோட்டிகள் சிக்கினர். மற்றவர்கள், வேக வரம்பை மீறியது, கவனக்குறைவாய் வாகனமோட்டியது முதலியவற்றுக்காக அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டனர்.