புலாவ் புக்கோம் எரிபொருள் திருட்டு - 290,000 வெள்ளி கையூட்டு பெற்றதாக 12 பேர் மீது குற்றச்சாட்டு

(படம்: TODAY)
Shell நிறுவனத்தின் புலாவ் புக்கோம் (Pulau Bukom) எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து எரிபொருள் திருடியதன் தொடர்பில் சுமார் 290,000 வெள்ளி பெறுமான கையூட்டு பெற்றதாக 12 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த ஆலையிலிருந்து 300,000 டன்னுக்கும் மேற்பட்ட எரிபொருளைக் களவாடுவதன் தொடர்பில் சதித்திட்டம் வரையப்பட்டதாகக் கூறப்பட்டது.
அதன் மதிப்பு குறைந்தது 200 மில்லியன் வெள்ளி என்று நம்பப்படுகிறது.
Shell-இன் எண்ணெய், விநியோகிக்கப்படும் கப்பல்களில் அது சரியாக ஏற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கப் பணியமர்த்தப்பட்ட நிறுவனங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரும் வேலை செய்தனர்.
கப்பல்களில் ஏற்றப்பட்ட எண்ணெயின் அளவைத் துல்லியமாகக் குறிப்பிடாமல் இருப்பதற்கு, அவர்களுக்குக் கையூட்டு கொடுக்கப்பட்டதாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு சொன்னது.
Shell நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் மூவரிடமிருந்து நேரடியாகவோ மற்றவர்கள் மூலமோ அந்த 12 பேரும் கையூட்டு பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கையூட்டு 2014-ஆம் ஆண்டுக்கும் 2017-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
எரிவாயுத் திருட்டை நடத்தியதாக நம்பப்படுவோரில் ஒருவரான,
ஜுவான்டி புங்கொட் (Juandi Pungot) 127.7 மில்லியன் வெள்ளி பெறுமான எரிபொருளைத் தவறாய்ப் பயன்படுத்தியதை இவ்வாண்டின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு 29 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Muzaffar Ali Khan Muhamad Akram, Richard Goh ஆகியோர் மீதான வழக்குகள் தொடர்கின்றன.