மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் 223 பேர் கைது
(படம்: Envato Elements)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர்க் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 147 ஆண்களும் 76 பெண்களும் பிடிபட்டனர்.
அவர்கள் 16 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்கள் 1,100க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
இணைய வர்த்தக மோசடி, வேலை மோசடி, நண்பரைப் போல ஆள்மாறாட்டம் செய்த மோசடி, முதலீட்டு மோசடி, இணையக் காதல் மோசடி, அரசாங்க அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்த மோசடி ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் 6.58 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை இழந்தனர்.
ஏமாற்று வேலை, பணமோசடி, உரிமம் இல்லாமல் கட்டணச் சேவை வழங்குதல் ஆகிய குற்றங்களுக்குச் சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
ஒருவரை ஏமாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது 500,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
உரிமம் இல்லாமல் கட்டணச் சேவைகள் வழங்கிய குற்றத்துக்கு 125,000 வெள்ளி வரையிலான அபராதம், மூவாண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.