கடந்த 5 ஆண்டுகளில் பொருள் குவிக்கப்பட்ட வீடுகளில் 23 தீச்சம்பவங்கள்

(SCDF)
சிங்கப்பூரில் பொருள்கள் குவிக்கப்பட்டிருந்த வீடுகளில் ஏற்பட்ட தீச்சம்பவங்களின் எண்ணிக்கை குறைவே என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் அத்தகைய 23 தீச்சம்பவங்கள் ஏற்பட்டன. மொத்தத் தீச்சம்பவங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அது குறைவு.
கழக வீடுகளில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 800 முதல் 900 வரையிலான தீச்சம்பவங்கள் பதிவானதாகத் திரு சண்முகம் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
வீடுகளில் பொருள்கள் குவிக்கப்படுவதைத் தடுக்க நகராண்மைச் சேவைகள் அலுவலகத்தின் தலைமையில் பல முயற்சிகள் எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
பொதுச் சுகாதார அபாயமோ, தீப்பிடிக்கும் அபாயமோ இருக்கும் சூழலில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, தேசிய சுற்றுப்புற அமைப்பு போன்றவை உதவும் என்று திரு சண்முகம் கூறினார்.