11.1 மில்லியன் வெள்ளி நட்டத்தை ஏற்படுத்திய மோசடிச் சம்பவங்கள் - 300க்கும் அதிகமானோரிடம் காவல்துறை விசாரணை

மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 362 பேர் மீது விசாரணை மேற்கொள்வதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் நேற்று (4 ஆகஸ்ட்) வரை நீடித்த அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகளில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
16 வயதுக்கும் 82 வயதுக்கும் இடைப்பட்ட நபர்களில் 249 ஆடவர்களும் 113 பெண்களும் அடங்குவர்.
சந்தேக நபர்கள் 1,050க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
இணையக் காதல் மோசடி, இணைய வர்த்தக மோசடி, வேலை மோசடி, முதலீட்டு மோசடி, கடன் மோசடி, சீன அரசாங்க அதிகாரிகளைப் போல் நடித்து ஏமாற்றிய மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மோசடிக்கு ஆளானோர் மொத்தம் 11.1 மில்லியன் வெள்ளிக்குமேல் இழந்ததாகக் கூறப்பட்டது.
மோசடி குறித்துத் தகவல் தெரிவிக்க விரும்புவோர் காவல்துறையின் நேரடித் தொலைபேசி எண்ணுக்கு (1800-255-0000) அழைக்கலாம்.
பொதுமக்கள் இணையம் வழியும் தகவல்களைச் சமர்ப்பிக்கலாம்.