இணையத்தில் விற்கப்பட்ட சுமார் 3,300 சட்டவிரோத சுகாதாரப் பொருள்கள் நீக்கம்: HSA
சுகாதார அறிவியல் ஆணையம் (Health Sciences Authority - HSA) இணையத்தில் விற்கப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட சட்டவிரோதமான சுகாதாரப் பொருள்களை நீக்கியுள்ளது.
அவற்றை விற்ற 1,000க்கும் மேற்பட்டோருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஆணையம் முதன்முறையாக 8 முன்னணி இணைய விற்பனைத் தளங்களுடன் இணைந்து அந்த நடவடிக்கையை எடுத்தது.
Amazon Singapore, Carousell, Ebay Singapore, Facebook, Lazada, Qoo10, Shopee, Tiktok ஆகிய 8 நிறுவனங்கள் அதில் பங்கெடுத்தன.
செப்டம்பர் 23ஆம் தேதிக்கும் அக்டோபர் 23ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நீக்கப்பட்ட பொருள்களில் 48 விழுக்காட்டுப் பொருள்கள் அழகியல் சார்ந்தவை என்று தெரிவிக்கப்பட்டது. எஞ்சிய பொருள்களில் 40 விழுக்காடு, மருந்தகங்களில் மட்டும் கிடைக்கும் மருந்துகள் என்று கூறப்பட்டது.
பொதுமக்கள் இணையத்தில் சுகாதாரப் பொருள்களை நம்பிக்கைக்குரிய விற்பனையாளர்களிடமிருந்து மட்டும் வாங்கும்படி ஆணையம் கேட்டுக்கொண்டது.
சந்தேகத்திற்குரிய சுகாதாரப் பொருள்களைக் கண்டால் உடனே புகார் அளிக்குமாறும் ஆணையம் நினைவூட்டியது.
சட்டவிரோதமாக சுகாதாரப் பொருள்களை விற்போருக்கு அதிகபட்சமாக மூவாண்டுச் சிறை, 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.