38 ஆக்ஸ்லி ரோடு வீடு - தெரிந்துகொள்ளவேண்டியவை
சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூவின் மகன் திரு லீ சியன் யாங் 38 ஆக்ஸ்லி ரோடு வீட்டை இடிப்பதற்கு விண்ணப்பிக்கவிருப்பதாக நேற்று (15 அக்டோபர்) தெரிவித்தார்.
திரு லீ குவான் யூ 2015ஆம் ஆண்டில் காலமாகும் வரை அங்குத் தங்கியிருந்தார்.
அதன் பின்னர் அவரது மகள் டாக்டர் லீ வெய் லிங் (Lee Wei Ling) அங்கு வசித்தார். அக்டோபர் 9ஆம் தேதி அவர் காலமானார்.
வீட்டின் முக்கியத்துவம்?
🏠சிங்கப்பூர் வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளுடன் தொடர்புடையது
🏠 மக்கள் செயல் கட்சி உருவாவதற்கு முன்னர் அங்குப் பல முக்கியமான சந்திப்புகள் நடந்தன
🏠 திரு லீ குவான் யூவின் 3 பிள்ளைகளும் அங்கு வளர்ந்தனர்
திரு லீ குவான் யூவின் விருப்பம்?
🏠 திரு லீ குவான் யூ வீட்டை இடிக்கவேண்டும் என்று பலமுறை கூறியிருக்கிறார்.
🏠 2011இல் வெளிவந்த Hard Truths To Keep Singapore Going என்ற புத்தகத்தில் தமது வீடு இருப்பதால் பக்கத்தில் உள்ள வீடுகளை உயரமாகக் கட்ட முடியவில்லை. எனவே வீட்டை இடித்துவிட்டு விதிமுறைகளை மாற்றுங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
🏠 2011 ஜூலை மாதம் அமைச்சரவைக்கு அனுப்பிய கடிதத்தில் அந்தக் கருத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
🏠 2011 டிசம்பர் மாதம் அமைச்சரவைக்கு மறுபடி எழுதிய கடிதத்தில் வீட்டைப் பாதுகாப்பதாக இருந்தால் அடித்தளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.
🏠 2013ஆம் ஆண்டில் திரு லீ குவான் யூ வெளியிட்ட உயிலில் தமது வீட்டை இடிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஒருவேளை வீட்டை இடிக்க இயலாவிட்டால் அங்குச் செல்ல தமது குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
🏠 தமது மகள் டாக்டர் லீ விருப்பத்திற்கேற்ப அந்த வீட்டில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கலாம் என்றும் உயிலில் எழுதப்பட்டிருந்தது.
ஒக்ஸ்லி ரோடு வீடு விவகாரம் பரவலாகப் பேசப்படுவது ஏன்?
🏠 2015ஆம் ஆண்டில் திரு லீ குவான் யூ மறைந்ததற்குப் பின்னர் திரு லீ சியன் யாங், டாக்டர் லீ வெய் லிங், திரு லீ சியன் லூங் ஆகியோருக்கு இடையே வீட்டை இடிப்பது குறித்து மாற்றுக் கருத்துகள் இடம்பெற்றன.
🏠 திரு லீ சியன் யாங், டாக்டர் லீ இருவரும் தந்தையின் விருப்பத்திற்கேற்ப வீட்டை இடிக்கவேண்டும் என்றனர். திரு லீ சியன் லூங் உயில் குறித்து தமக்குச் சில கேள்விகள் இருப்பதாகச் சொன்னார்.
🏠 வீட்டைப் பற்றி முடிவெடுக்க அமைச்சர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. 3 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
1) வீட்டை உள்ளப்படியே வைத்திருப்பது
2) வீட்டின் அடித்தளத்தை மட்டுமே வைத்திருப்பது
3) வீட்டை இடிப்பது
டாக்டர் லீ வெய் லிங் அங்குத் தங்கியிருந்ததால் அச்சமயம் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் வீடு குறித்து முடிவெடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பரிந்துரைகள் கைகொடுக்கும் என்று குழு தெரிவித்தது.
டாக்டர் லீ மறைவுக்குப்பின் அரசாங்கத்தின் நிலைப்பாடு?
38 ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர்பான விவகாரங்களை அரசாங்கம் கவனமாகப் பரிசீலிக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று (15 அக்டோபர்) கூறியது.