சிங்கப்பூருக்குள் $20,000க்குமேல் கொண்டுவந்த 4 பேர் பிடிபட்டனர்
(படம்: police.gov.sg)
அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்காமல் சிங்கப்பூருக்குள் அளவுக்கு அதிகமான ரொக்கத்துடன் வந்த 4 பேர் பிடிபட்டுள்ளனர்.
காவல்துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், சிங்கப்பூர் சுங்கத்துறை ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கை இதனைத் தெரிவித்தது.
இம்மாதம் 6ஆம் தேதிக்கும் 12ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சோதனைச்சாவடிகளில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
12,000க்கும் அதிகமான பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
420க்கும் அதிகமான வாகனங்களும் 18,000 பயணப் பெட்டிகளும் சோதிக்கப்பட்டன.
சிங்கப்பூருக்குள் 20,000 வெள்ளிக்குமேல் ரொக்கத்துடன் வருபவர்கள் அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்கவேண்டும்.
அதைச் செய்யத் தவறிய நால்வர் பிடிபட்டனர்.
அவர்கள் 30 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்களில் 30 வயது ஆடவர் ஆக அதிகமாக 65,000 வெள்ளி ரொக்கத்துடன் சிங்கப்பூருக்குள் வந்தார்.
நால்வரில் இருவர் மொத்தம் 10,000 வெள்ளி கட்டணம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
எஞ்சிய இருவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தீர்வை அல்லது பொருள்,சேவை வரி செலுத்தத் தவறிய மேலும் 43 பயணிகளும் பிடிபட்டதாக அதிகாரிகள் கூறினர்.
பயணிகள் செலுத்தத் தவறிய வரித்தொகை மொத்தம் 5,354 வெள்ளி.
அவர்கள் 9,740 வெள்ளி கட்டணம் செலுத்த உத்தரவிடப்பட்டது.