9,300 தனியார் வீடுகள் விற்பனை
(படம்: AFP/Roslan Rahman)
சிங்கப்பூரில் இந்த ஆண்டு மொத்தம் 9,300 மேற்பட்ட தனியார் வீடுகள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பதிவான சராசரி எண்ணிக்கையை விட இது சுமார் 50 விழுக்காடு அதிகம்.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதிக்கான அரசாங்க நில விற்பனைத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சு கூறியது.
திட்டத்தின்கீழ் ஒன்பது கட்டுமான இடங்கள் உறுதிசெய்யப்பட்டன.
அவற்றில் சுமார் 4,700 தனியார் வீடுகள் விற்பனைக்கு வரும்.
ஏற்கனவே இந்த ஆண்டின் முதல் பாதியில் 4,500க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனைக்கு வந்தன.
அடுத்த ஈராண்டுகளில் விற்பனைக்கு வரும் தனியார் வீடுகளின் மொத்தம் எண்ணிக்கை சுமார் 61,000ஆக இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) கூறினார்.
அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் தனியார் வீடுகளுக்கு ஒதுக்கப்படும் நிலம் அதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.