"மிகப் பழைமையான இந்திய சைவ உணவகம்" - சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ஆனந்தபவன்

(படம்: ஆனந்தபவன் உணவகம்)
ஆனந்தபவன் உணவகம் 'சிங்கப்பூரிலுள்ள மிகப் பழைமையான இந்திய சைவ உணவகம்' என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகம் அந்த அங்கீகாரத்தை வழங்கியது.
தொழில்நுட்ப மாற்றங்களுக்கு இடையில் ஆரோக்கியமான சைவ உணவை அதன் பாரம்பரியம் மாறாமல் கொடுத்துவரும் ஆனந்தபவன் உணவகத்துக்கு இந்த விருதை வழங்குவதில் பெருமையடைவதாகச் சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தின் தலைவர் ஓங் எங் ஹுவாட் (Ong Eng Huat) சொன்னார்.

உணவகத்தின் 100 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.
விருந்து உபசரிப்பில் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவரது மனைவியும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
உணவகத்தைத் தற்போது 3ஆம் தலைமுறையினர் வழிநடத்துகின்றனர்.

நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 100 ஆண்டு உணவுப் பட்டியலை ஆனந்தபவன் அறிமுகப்படுத்தியது. பல்லாண்டாக வாடிக்கையாளர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகள் அதில் இடம்பெற்றுள்ளன.
உணவகத்தின் பாரம்பரியத்தையும் வரலாற்று ஆவணங்கள், அறைகலன்களையும் எடுத்துக்காட்டும் சிறிய கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.